பிராஜெக்ட் குடென்பெர்க் - மின் நூலகங்களின் தாய்
’பிராஜெக்ட் குடென்பர்க்’ இணையதளத்தை பார்த்ததுமே காலாவதியான பழைய இணையதளம் போல தோன்றும். ஆனால், தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது என்பது இந்த தளத்திற்கு நிச்சயம் பொருந்தும். இது பழைய தளம் தான். ஆனால் அது தான் அதன் பெருமை. ஆம், இந்த தளம் இணையத்தின் பழமையான தளங்களில் ஒன்று என்பதோடு, முன்னோடி தளங்களில் ஒன்று.
மிக மிக சாதாரணமான முகப்பு பக்கத்தை மீறி, இணையத்தின் உயிரோட்டமான இணையதளங்களில் ஒன்றாகவும் விளங்கும் தளம்!
இந்த தளத்தில் நிதானமாக உலா வரும் போது அதன் பெருமையை எளிதாக உணரலாம். மின்னூல்களை வாசிக்க உதவும் டிஜிட்டல் நூலகமாக விளங்குகிறது என்பது தான் அந்த பெருமை.
மின்னூல்கள் என்றவுடன், பலருக்கும் அமேசான் வழங்கும் இ- புத்தகங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், மின்னூல்களை பொருத்தவரை குடென்பெர்க் தளம், அமேசானுக்கே முன்னோடி. ஏனெனில் மின்னூல்களின் துவக்கமாக அமைவதே இந்த தளம் தான். அதனால் தான், டிஜிட்டல் நூலகங்களுக்கும் எல்லாம் தாய் என இது போற்றப்படுகிறது.
குடென்பர்க் திட்டத்தின் நிறுவனரான மைக்கேல் ஹார்ட் (Michael Hart ) தான், முதன் முதலில் மின்னூலை உருவாக்கியவர். இணையம் என்பது அதன் பிள்ளை பருவத்தில் இருந்த காலத்தில் 1971 ல், மைக்கேல் ஹார்ட் உலகின் முதல் மின்னூலை உருவாக்கினார்.
அச்சு பதிப்பில் இருந்தவற்றை அப்படியே தட்டச்சு செய்து கம்ப்யூட்டரில் ஏற்றியது தான் ஹார்ட் செய்தது என்றாலும், அந்த கால கட்டத்தில் இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பாக இருந்தது. அச்சு பிரதிகளில் உள்ளவற்றை அப்படியே கம்ப்யூட்டரில் பதிவேற்றி அதை மின்னணும் கோப்பு வடிவில் வாசிக்கலாம் என்பது அதற்கு முன் யாரும் சிந்தித்து பார்த்திராதது.
ஹார்ட்டுக்கு இந்த எண்ணம் தோன்றிய விதம் சுவாரஸ்மானது. அப்போது கல்லூரி மாணவரான ஹார்ட், ஒரு நாள் மாலை உடனே வீட்டுக்குச்செல்ல மனம் இல்லாமல் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் கூடத்திற்கு சென்றார். அதற்கு முன்னதாக கடைக்காரர் ஒருவர், அமெரிக்க சுதந்திர பிரகடன புத்தகத்தின் இலவச பிரதி ஒன்றை அவரிடம் இலவசமாக வழங்கியிருந்தார்.
கம்ப்யூட்டர் முன் அமர்ந்த போது, அந்த புத்தகம் பையில் இருந்து கீழே விழ, ஹார்ட்டிற்கு பளிச் என ஒரு யோசனை உண்டானது. கம்ப்யூட்டரை எல்லோருக்கும் பயன் மிக்கதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவர் மனதில், அந்த புத்தகத்தை அப்படியே தட்டச்சு செய்து கம்ப்யூட்டரில் படிக்க வழி செய்தால் என்ன என்று தோன்றியது.
உடனே ஹார்ட் அந்த புத்தகத்தில் இருந்த வரிகளை தட்டச்சு செய்யத்துவங்கினார். இப்படி தான் உலகின் முதல் மின்னூல் உருவானது.
அதன் பின், மின்னூல் வளர்ச்சியில் கிளைக்கதைகள் உண்டென்றாலும், குடென்பெர்க் திட்டத்தின் துவக்கமாக இது அமைந்தது. அச்சு புத்தகங்களை எல்லாம் கம்ப்யூட்டர் மூலம் வாசிக்க வழி செய்வது, இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
காப்புரிமை விடுபட்டு பொதுவெளியில் உள்ள புத்தகங்களை எல்லாம் இப்படி மின்னூலாக்கி வழங்கினால் உலகின் எந்த மூளையில் உள்ளவரும் எளிதாக அவற்றை படிக்கலாம் என்பது ஹார்ட்டின் கனவாக அமைந்தது. தன்னார்வலர்கள் உதவியோடு இந்த கனவை அவர் செயல்படுத்தினார்.
அதாவது, புத்தகங்களை எல்லாம் வெகு சிரத்தையாக டிஜிட்டல் மயமாக்கி கொண்டிருந்தார். டிஜிட்டல்மயமாக்குவது என்பதை, பொறுமையாக தட்டச்சு செய்வது என இங்கே புரிந்து கொள்ள வேண்டும். பின்னர், ஓ.சி.ஆர் எனப்படும் எழுத்துரு உணர்தல் மென்பொருள் பயன்படுத்தப்பட்டாலும், டிஜிட்டல் பிரதிகள் தொடர்ந்து கவனமாக பிழை திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், ஹார்ட்டின் தன்னார்வலர் குழு இந்த பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் மின்னூல்கள் பிரபலமாகவில்லை என்பது மட்டும் அல்ல, நாமறிந்த வகையில் இணையமும் உருவாகியிருக்கவில்லை.
பின்னர் 1993 ல், இணையத்தின் அங்கமான வலை பொதுமக்களுக்கு அறிமுகமான போது, குடென்பெர்க் திட்டம் இணையத்தில் இடம்பெற்றது. குடென்பெர்க்.ஆர்க் எனும் முகவரியிலான தளத்தில், மின்னூல்களை அணுகுவது சாத்தியமானது.
*
குடென்பெர்க் திட்ட இணையதளத்தில், 60,000 க்கும் மேற்பட்ட மின்நூல்கள் இடம்பெற்றுள்ளன. சாதாரண எச்.டி.எம்.எல் உள்ளிட்ட பல வடிவங்களில் நூல்களை வாசிக்கலாம். கிண்டில் சாதனங்களிலும் வாசிக்கும் வசதி இருக்கிறது.
இந்த தளத்தின் வடிவமைப்பும், தோற்றமும் அத்தனை ஈர்ப்புடையதாக இல்லை என்பதை மீறி, இதில் உள்ள மின்னூல்கள் கவர்ந்திழுப்பதை தளத்தை பயன்படுத்தும் போது உணரலாம்.
மின்னூல்களை பலவிதமாக அணுகலாம். புத்தக வகைகள் அல்லது புத்தக அலமாரியை கிளிக் செய்து, மின்னூல்களை தேர்வு செய்து வாசிக்கலாம். அல்லது, தேடல் வசதி மூலம் புத்தகங்களை அணுகலாம். அண்மையில் பதிவேற்றப்பட்ட மின்னூல்கள் பட்டியலில் இருந்தும் துவங்கலாம்.
கிண்டில் வாசிப்புக்கு பழக்கப்பட்டவர்களுக்கு, இந்த மின்னூல்களின் புராதன தன்மை சுவாரஸ்யம் தராமல் போகலாம். ஆனால், இதில் உள்ள மின்னூல்கள் எல்லாம், கைகுத்தல் அரசி போல கவனமாக உருவாக்கப்பட்டவை என்பதை உணர வேண்டும். முன்பே குறிப்பிட்டது போல, டிஜிட்டல்மயமான நூல்கள் அனைத்தும், மூலப்பிரதியுடன் ஒப்பிட்டு வெகு கவனமாக பிழை திருத்தம் பார்த்து பதிபிக்கப்பட்டவை. ( பிழை திருத்தல் செய்யும் விருப்பம் கொண்டவர்கள், தன்னார்வலர்களாக பங்களிக்கலாம்). எனவே, பதிப்பு பிழைகள் இல்லாத நூல்கள் இவை.
மேலும், இந்த நூல்கள் எல்லாம் இலவச நூல்கள் அல்ல: சுதந்திரமாக கிடைப்பவை. இதன் பொருள் இந்த நூல்களை வாசிப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான். இது தொடர்பான விளக்கமும் தளத்தில் இடம்பெற்றுள்ளது. காப்புரிமை விடுபட்ட நூல்கள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறுவது இந்த காரணத்தினால் தான்.
இணையதள முகவரி: http://www.gutenberg.org/
-
குடென்பெர்க் திட்ட இணையதளத்தை மொபைல் வடிவிலும் அணுகலாம்.
-