இந்த வார்த்தை உலகில் இல்லை
மனிதர்கள் மீம்களை உருவாக்குவதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு மீம்களை உருவாக்கித்தரும் ’திஸ் மீம் டஸ் நான் எக்சிஸ்ட்’ இணையதளம் பற்றி நேற்று பார்த்தோம். இன்று இதே வகையை அமைந்திருக்கும், ’திஸ் வேர்ட் டஸ் நாட் எக்சிஸ்ட்’ இணையதளத்தை பார்க்கலாம்.- https://www.thisworddoesnotexist.com/
மீம் உருவாக்கு தளத்தை விட, இந்த தளம் வியப்பானது. அந்த தளத்திலாவது, புகைப்படத்தை நாம் தேர்வு செய்தால், ஏ.ஐ அதற்கான மீம் வாசகத்தை உருவாக்கித்தருகிறது. ஆனால், திஸ் வேர்டு டஸ் நான் எக்சிஸ்ட் இணையதளத்தில், ஒவ்வொரு கிளிக்கிலும் ஏ.ஐ ஒரு புதிய வார்த்தையை உருவாக்கித்தருகிறது.
ஒவ்வொன்றும் புதிய வார்த்தை- அகராதியிலோ, ஆங்கில மொழியிலோ இல்லாத வார்த்தை.
இப்படி இல்லாத வார்த்தைகளை உருவாக்கி, அதற்கு அகராதியில் உள்ளது போலவே அர்த்தமும் தருகிறது இந்த தளம். உதாரணம்: டெஃபி எனும் வார்த்தை. அதீதமான அல்லது தீங்கிழைக்கும் ஒலியால் பாதிக்கப்படும் மொழி அல்லது பேச்சு என இதற்கு பொருள் தரப்பட்டுள்ளது.
அடுத்த கிளிக்கில் டென்சிடைஸ் எனும் வார்த்தை வருகிறது. சிக்கல் அல்லது அளவை குறைக்கும் என்று இதற்கு பொருள் தருகிறது.
இப்படி வரிசையாக இல்லாத வார்த்தைகளை உருவாக்கி கொண்டே இருக்கிறது இந்த தளம். வார்த்தைகளுக்கான பொருள் விளக்கத்துடன், அவற்றை உச்சரிக்கும் விதமும் விளக்கப்படுகிறது.
வார்த்தைகள் எல்லாம் ஆங்கில மொழியில் இடம்பெற்றுள்ள நாம் அறியாத வார்த்தைகள் போலவே இருக்கின்றன. அவற்றுக்கான பொருள் விளக்கம் இன்னமும் அச்ச அசலாக இருக்கிறது.
ஜிபி-2 (GPT-2) எனும் மொழி தொடர்பான செயற்கை நுண்ணறிவு புரோகிராம் உதவியுடன் தாமஸ் டைசன் என்பவர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு புரோகிராம், பல்வேறு சாட்பாட்கள் மற்றும் மொழி விளையாட்டுகளை இயக்க பயன்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான ஆழ் கற்றல் அடிப்படையில் மொழியில் காணப்படும் பொது வார்ப்புகளை கண்டுணர்ந்து அதற்கேற்ப செயல்படும் வகையில் இந்த புரோகிராம் அமைந்துள்ளது.
நிற்க, இதே போலவே இல்லாத பூனைகளை உருவாக்கி காட்டும், திஸ் கேட் டஸ் நான் எக்சிஸ்ட் போன்ற ஏ.ஐ தளங்களும் இருக்கின்றன. இந்த தளங்களுக்கு எல்லாம் முன்னோடி, இல்லாத மனிதர்களை உருவாக்கும் திஸ் பர்சன் ட்ஸ் நான் எக்சிஸ்ட் எனும் தளம் தான். இந்த தளத்தை பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
-
தொலைவை அளக்க ஒரு இணையதளம்
உங்கள் நகருக்கும், இன்னொரு நகருக்கும் இடையிலான தொலைவை அளக்க விருப்பமா? டிஸ்டன்ஸ்.டு (https://www.distance.to/) தளத்தில் இப்படி இரண்டு நகரங்களுக்கு இடையிலான தொலைவை அளந்தறியலாம். உங்கள் நகரம் என்றில்லை, உலகில் உள்ள எந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான தொலைவையும், இந்த தளம் அளந்து சொல்லி விடுகிறது. அழகாக. பூமி வரைபடத்தின் மீது நகரங்களுக்கு இடையிலான தொலவை கோடு போட்டும் உணர்த்துகிறது.
இடங்களுக்கு இடையிலான தொலைவு தவிர, அங்கு செல்வதற்கான பயண நேரம் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்கிறது. உப தகவல்கள் பலவும் இடம்பெறுகின்றன. விமான தொலைவு, நேர இடைவெளி உள்ளிட்ட தகவல்களையும் எளிதாக அறியலாம்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களின் தொலைவையும் கணக்கிடலாம்.
கூகுள் மேப்பிலும் இது போன்ற வசதி இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆம், கூகுள் மேப்பிலும் இந்த வசதி இருக்கிறது. ஆனால், இந்த தளம், கூகுள் மேப்சிற்கு சரியான மாற்றாக கருதப்படும் ஓபன்ஸ்டிரீட்மேப் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது விஷேசம்.
ஓபன்ஸ்டிரீட்மேப் சேவை ,ஓபன் சோர்ஸ் தன்மை கொண்டது. அதாவது விக்கிபீடியா போல இந்த வரைபட சேவை, பொதுமக்கள் பங்களிப்பால் உருவானது.ம் ஓபன்ஸ்டிரீட்மேப் அருமை பெருமைகள் பற்றியும் பார்க்கலாம்.