ஆன்லைனில் நாடகம் தொடரும் …
இணையத்தில் இப்போது நிகழும் விஷயங்களில் மிகவும் சிறந்தது இது தான்! – இணைய ரசிகர் ஒருவர் இப்படி பாராட்டியிருப்பது ராப்மைல்ஸ் என்பவர் ஷேக்ஸ்பியர் நாடகங்களை இணையம் மூலம் நிகழ்த்தி வருவதை தான்.
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பன்முக கலைஞரான ராப் மைல்ஸ், ஷேக்ஸ்பியர் நாடகங்களில் விஷேச ஆர்வம் கொண்டவர். ஷேக்ஸ்பியரை சமகால தலைமுறையினரிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் ஷேக்ஸ்பியர் டெக் எனும் அட்டைகளை இவர் உருவாக்கியிருக்கிறார்.
இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக, அவருக்கு ஏற்பாடாகி இருந்த நிகழ்ச்சி ரத்தானது. இத்தகைய பாதிப்பு தனக்கு மட்டும் அல்ல என்பதையும், இயல்பு நிலை இப்போதைக்கு திரும்ப போவதில்லை என்பதையும் உணர்ந்த மைல்ஸ், ஷேக்ஸ்பியரிடமே தஞ்சம் அடைய தீர்மானித்தார்.
எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழலில், ஆன்லைனில் ஷேக்ஸ்பியர் ஷேக்ஸ்பியர் வாசிப்பு குழுவை ஏற்படுத்தலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இந்த யோசனையை டிவிட்டரில் கருத்து தெரிவித்த போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் இதற்கு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.
இந்த எதிர்பாராத ஆதரவால் உற்சாகமான மைல்ஸ், இணையம் மூலமே ஷேக்ஸ்பியர் நாடகங்களை நேரடியாக வாசித்துக்காட்டுவது என தனது யோசனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
நம்மூரில் அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும் என்று சொல்வது போல, ஊரடங்கு காலத்திலும் ஆன்லைனில் நாடகம் நடைபெறும் என்று சொல்லி, ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஆன்லைனில் அரங்கேற்றத்துவங்கினார்.
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஆர்வம் உள்ளவர்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே, தங்களுக்கான பாத்திரங்களை வாசித்துக்காட்ட அனைத்தையும், ஜூம் வீடியோ சந்திப்பு செயலி மூலம் ஒருங்கிணைத்து ஆன்லைனில் நேரலையாக வழங்கி வருகிறார். மற்றவர்களும் ஜூம் செயலி வழியே பங்கேற்று வருகின்றனர்.
மேடை நாடகங்களை பார்த்து ரசிப்பது ஒரு அனுபவம், என்றால், கம்ப்யூட்டர் திரையில் ஜூம் செயலி வழியே நாடக பாத்திரங்கள் தோன்றி வசனங்களை வாசித்துக்காட்டுவது புதுவித அனுபவமாக இருக்கிறது. அதைவிட முக்கியமாக, எல்லோரும் தனிமனித விலகலை கடைப்பிடிக்க வேண்டிய சூழலில், ஷேக்ஸ்பியர் எனும் மகா கலைஞன் படைப்புகள் மீதான ஆர்வம் எனும் சங்கிலியால் பலரும் ஒன்றுபடும் வாய்ப்பையும் இது அளித்துள்ளது.
இந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களை நேரடியாக கண்டு மகிழலாம். ஷேக்ஸ்பியர் நாடக பரிட்சயம் கொண்டவர்கள் இதில் பங்கேற்கவும் செய்யலாம். இந்த நாடக பதிவுகளை யூடியூப்பிலும் காணலாம்.
கொரோனா விலகிய பிறகு, இணையத்தில் இது போன்ற புதுமைகளை இன்னும் அதிகம் காண வாய்ப்பிருக்கிறது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன்லைன் எனும் தலைப்பில் இந்த நிகழ்ச்சிகளை ராப் மைல்ஸ் இணையதளத்தில் காணலாம்: https://robmyles.co.uk/theshowmustgoonline/