கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் டிஜிட்டல் சித்திரங்கள்
ஓவியர்கள் பல நேரங்களில் நேரடியாக மனிதர்களை போஸ் கொடுக்க வைத்து வரைவதுண்டு. இணையத்தில் புழங்கும் டிஜிட்டல் ஓவியர்களுக்கு இதே போன்ற வசதி தேவைப்பட்டால் என்ன செய்வது எனும் கேள்விக்கு பதிலாக ஜெஸ்ட்ஸ்கெட்ச்.மீ (https://justsketch.me/ ) இணையதளம் அமைந்துள்ளது.
இந்த தளம், டிஜிட்டல் கலைஞர்கள் தங்கள் மனதில் உள்ள சித்திரங்களுக்கு மாதிரியாக கொள்ளக்கூடிய டிஜிட்டல் மாதிரிகளை உருவாக்கி தருகிறது.
காமிக் புத்தகங்களுக்காக வரைவதாக இருந்தாலும் சரி, அல்லது வரைகலை சித்திரங்களை உருவாக்குவதாக இருந்தாலும் சரி, அதற்கேற்ற உடல்வாகை அடிப்படையாக கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும். இதை டிஜிட்டல் வடிவில் சாத்தியமாக்குகிறது இந்த தளம்.
கலைஞர்கள், டிஜிட்டல் மாதிரி தோற்றம் தேவை என உணரும் போது, இந்த தளத்தில் உள்ள வசதியை இயக்கி, ஆண் அல்லது பெண் டிஜிட்டல் உருவத்தை திரையில் உருவாக்கி கொள்ளலாம். இந்த உருவங்கள் பொம்மலாட்ட பொம்மைகள் போல டிஜிட்டல் கயிறுகளால் இயக்கப்படக்கூடியவை என்பதால், அவற்றை விரும்பிய வகையில் போஸ் கொடுக்க வைத்து, வரையத்துவங்கலாம்.
நிஜ உலகிலாவது, ஒவ்வொரு சித்திரத்திற்கும் ஒரு மனிதரை தேட வேண்டும்,. ஆனால், டிஜிட்டல் உலகில் ஒரு அடிப்படை உருவத்தை வைத்துக்கொண்டு தேவையானபடி போஸ் கொடுக்க வைக்கலாம். என்பதை இந்த தளம் கச்சிதமாக உணர்த்துகிறது.
டிஜிட்டல் கலைஞர்கள் பலர், இந்த வசதியை பயன்படுத்தி தாங்கள் பெற்ற உற்சாகத்தை, தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருப்பதையும் இந்த தளத்தில் பார்க்கலாம்.
-
நினைத்தை முடிக்க வைக்கும் செயலி
பின்னிட் (Pinnit ) செயலியை நினைத்ததை முடிப்பவன் செயலி என வர்ணிக்கலாம். ஏனெனில், பயனாளிகள் செய்து முடிக்க நினைப்பவற்றை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறது.
அடிப்படையில் பின்னிட், ஆங்கிலத்தில் ’டூ டு லிஸ்ட்’ என குறிப்பிடப்படும் செய்ய வேண்டிய செயல்கள் பட்டியல் வகை செயலி தான். எல்லோருமே, சோம்பலை விலக்கி வைத்து, சுறுசுறுப்பை மனதில் வரித்துக்கொண்டு, செய்ய வேண்டியவற்றை எல்லாம் திட்டமிட்டு செய்யவே விரும்புகிறோம். இதில் ஏற்படும் தடைகளை வெல்ல செய் பட்டியல்கள் உதவுகின்றன.
அதாவது, செய்ய வேண்டிய செயல்களை காகிதத்தில் குறித்து வைத்துக்கொண்டு செய்து முடிப்பது. டிஜிட்டல் யுகத்தில் இதில் உதவுவதற்காக என்றே, எண்ணற்ற இணைய சேவைகள், செயலிகள் இருக்கின்றன.
இந்த வரிசையில் வரும் பின்னிட் செயலியின் என்ன விஷேசம் என்றால், இதில் நாம் செய்ய திட்டமிட்டுள்ள பணிகளை இதில் குறித்து வைத்த பிறகு, அந்த செயல் போனில் நோட்டிபிகேஷனாக தோன்றும், தோன்றிக்கொண்டே இருக்கும். குறிப்பிட்ட அந்த செயலை நிறைவேற்றி, டெலிட் செய்த பிறகே நோட்டிபிகேஷன் மறையும்.
நோட்டிபிகேஷனை நினைத்தவுடன் டெலிட் செய்ய இந்த செயலி அனுமதிப்பதில்லை. அதற்கான வசதியை தேடி வர வைத்தால் மட்டுமே டெலிட் செய்ய முடியும். அதுவரை, நினைவூட்டல் தொடரும் என்பதால், திட்டமிட்ட செயல்களை தாமதிக்காமல் அல்லது தள்ளிப்போடாமல் செய்து முடிக்க இந்த செயலி உதவும்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=dev.sasikanth.pinnit
-