கொரோனாவுக்கு எதிரான ஐகான்கள்
சிறு அல்லது குருந்தொழில்கள் என சொல்லப்படுவது போல, சிறு அல்லது குரு தேடியந்திரங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட துறை அல்லது குறிப்பிட்ட பிரிவு சார்ந்த தேடல் சேவையை வழங்கும் தேடியந்திரங்களை இவ்வாறு குறிப்பிடலாம். உதாரணம் தேவை எனில், ஐகான்பைண்டர்.
ஐகான் என சொல்லப்படும் உருவங்கள் அல்லது அடையாள சின்னங்களை தேடுவதற்கான தேடியந்திரம் இது.
தகவல் உள்ளிட்டவற்றை தேட கூகுள் இருக்கிறது என்றாலும், துறை சார்ந்த குறிப்பிட்ட விஷயங்கள் தேவை எனில் அவற்றுக்கான தனி தேடியந்திரங்களை நாடுவதே சிறந்தது. அந்த வகையில், ஐகான் எனப்படும் அடையாள சின்னங்களை மட்டும் தேடுவதற்கு ஐகான்பைண்டர் கைகொடுக்கிறது.
வரைகலை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கொண்டாடக்கூடிய தேடியந்திரம் இது.
நிற்க, தற்போது உலகை கொரோனா வைரஸ் உலுக்கி வரும் நிலையில், இந்த தேடியந்திரம் கொரோனா விழிப்புணர்வில் தேவைப்படக்கூடிய 300 க்கும் மேற்பட்ட வெக்டார் ஐகான்களை வெளியிட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க கைகழுவுவதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது அல்லவா? இதற்கான வாசகங்களோடு, கைகழுவுவதை குறிக்கும் ஒரு ஐகான் இருந்தால் அந்த செய்தி பளிச்சென மனதில் பதிவும் அல்லவா? இது போல, கொரோனா விழிப்புணர்வு செய்தி காட்சிரீதியாக சொல்ல உதவும் ஐகான்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கைக்ழுவுவது, வைரஸ் தடுப்பு, வைரஸ் தகவல் உள்ளிட்ட பிரிவுகளில், பொருத்தமான ஐகான்கள் வடிவமைப்பாளர்களால் உருவாக்கி சமர்பிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, ஐகான்பைண்டரில் உள்ள பிரத்யேக ஐகான்களை கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும். கொரோனா ஐகான்களை இலவசமாக பயன்படுத்தலாம்.
தேடியந்திர முகவரி: https://www.iconfinder.com/p/coronavirus-awareness-icons?
-
இந்த மின்னஞ்சல் பயனுள்ளதாக கருதினால், உங்கள் நட்பு வட்டத்திலும் பரிந்துரைக்கலாம்.