ஜூமில் ஒரு அமைதி கூட்டம்
வீடியோ உரையாடல் செயலியான ஜூம் உபயத்தால் இப்போது, ஜூம் சந்திப்புகள், ஜூம் வகுப்புகள், ஜூம் கலந்துரையாடல்கள், ஜூம் பேருரைகள் என பலவகை காணொலி நிகழ்ச்சிகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த வரிசையில் நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு புதிய வகை நிகழ்ச்சி சேர்ந்திருக்கிறது. கொஞ்சம் அமைதியாக இருந்து என்னவென்று யூகிக்க முடிகிறதா பாருங்கள்.
ஜூம் வழி அமைதி வாசிப்புகள் தான் இந்த புதிய நிகழ்ச்சி. ஆம், ஜூம் காணொலி சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அமைதியாக இருப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
நேரில் சந்திக்க முடியாத குறையை தீர்க்கும் வகையில் வீடியோ வழியே உரையாடலை மேற்கொள்ள வழி செய்வது தான் ஜூம் செயலியின் சிறப்பு என நினைத்துக்கொண்டிருந்தால், ஜூம் வழியே அமையாக இருப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு என்று சொல்லப்படுவது விநோதமாக தோன்றலாம்.
ஆனால், கனடா யூடியூப் புக்டியூபரான ’சோஜர்னர் கேம்பல்’ (Sojourner-Campbell) என்பவர், சக புக்டியூபருடன் சேர்ந்து இத்தகைய ஜூம் அமைதி சந்திப்புகளை நடத்தி வருகிறார். இதற்காக அவர் தனது வலைப்பதிவில் குவாரண்டைண்டு பேஜஸ் எனும் பக்கத்தை அமைத்திருக்கிறார். கொரோனா பாதிப்பு காலத்தில், மற்றவர்கள் துணையோடு குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த இந்த சந்திப்பு உதவும் என்பது அவரது நம்பிக்கை.
இந்த பக்கத்தின் மூலம், ஜூம் வழி அமைதி வாசிப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறார். நிகழ்ச்சிக்கான ஒரு மணி நேரத்தில், புத்தகம் அமைதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு மணி நேரம் ஜூம் முன்பாக அமைதியாக புத்தகம் படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
ஜூம் முன்பாக பேசிக்கொண்டு தான் இருக்க வேண்டுமா என்ன, நண்பர்களை காணொலியில் அழைத்து, ஒன்றாக சேர்ந்து புத்தகம் வாசிக்க கூடாதா என்ன?
இதற்கு ஜூம் சந்திப்பு எதற்கு, அவரவர் தனிமையில் புத்தகம் படிக்கலாமே என்று கேட்கலாம். ஆனால், ஜூம் சந்திப்பு எனில், தோழமைக்கு நபர்கள் இருப்பது ஒரு ஊக்கம் என்றால், மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதால் வரும் பொறுப்பேற்பு தன்மையும் கைகொடுக்கிறது அல்லவா! அது மட்டும் அல்ல, கவன குவிப்பிக்கும் இது வழி செய்யும்.
எழுத்தாளரான, அன்னா பென்கத் (Anne Penketh), அமைதி ஜூம் கூட்டங்களை, நூலகத்தில் அமர்ந்து படிப்பது போல அல்லது எழுதுவது போல என வழிமொழிகிறார்.
இணைய முகவரி: https://njeridamalicampbell.wordpress.com/2020/03/29/quarantined-pages/
( புக்டியூபர் என்றால், யூடியூப் மூலம் புத்தக அறிமுகம் அல்லது விமர்சனம் செய்பவர் என்று பொருள்.)
-
2 நிமிட இணையதளம்
இணையத்தின் எளிமையான ஆனால் மிக சுவாரஸ்யமான இணையதளங்களில் ஒன்று, ‘டூநத்திங்பார்2மினிட்ஸ்’. அதாவது 2 நிமிடம் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்கான தளம்.
ஆம், இந்த தளத்தில் நுழைந்ததுமே, 2 நிமிடங்கள் எதையும் செய்யாமல், அமைதியாக இருங்கள் என தெரிவிக்கப்படும். அதன் பிறகு, 2 நிமிடங்களுக்கான கவுண்டவுன் துவங்கிவிடும். திரையில் தோன்றும் அழகான இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை பார்த்தபடி, பின்னணியில் ஒலிக்கும் மெல்லிய கடல் அலை இறைச்சலை கேட்டபடி, இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
பரபரப்பான வாழ்க்கை சூழலில், இடையே மிகவும் அவசியமான மன அமைதியை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளம் இது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இணையத்தில் அமைதி பணியாற்றி வருகிறது.
இந்த தளத்தின் இன்னும் அழகான மேம்பட்ட இன்னொரு வடிவம் இருக்கிறது. உங்கள் யாராலாவது அந்த தளத்தை கண்டறிந்து சொல்ல முடியுமா? அமைதி தான் உங்களுக்கான க்ளு.
இணையதள முகவரி: http://www.donothingfor2minutes.com/
-
மழை பெய்யும் இணையதளம்
நீங்கள் மழை பிரியரா? எனில், உங்கள் கம்ப்யூட்டர் திரையில் மழையை பார்த்தபடி வேலை செய்யலாம் தெரியுமா? ரெயினிங்.எப்.எம் ( https://raining.fm/) இணையதளம், இந்த இனிய வசதியை அளிக்கிறது. இந்த தளத்தில் மழை பெய்யும் ஒலியை கேட்டு ரசிக்கலாம். அப்படியே மழைக்காட்சியை பார்த்தும் ரசிக்கலாம். சாரல் மழை, இடியுடன் கூடிய மழை என நம் மனது விரும்பும் மழையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
நிஜ உலகில் நம் மனது விரும்பும் சூழலை கம்ப்யூட்டருக்குள் உருவாக்கித்தரும் இந்த வகை இணையதளங்கள் இன்னும் பல இருக்கின்றன. வரும் நாட்களில் பார்க்கலாம். நீங்களும் தேடிப்பார்த்து பரிந்துரைக்கலாம்!.
-