’ஸ்பாட்டிபை’ யில் இணைய சேர்ந்திசை
இசைமயமான ஒரு சேவையை பார்க்கலாம். இசைமயமான இணையதளம் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை கேட்டு இசைப்பிரியர்கள் சொக்கிப்போகலாம்.
இணைய இசை கேட்பு சேவையான ’ஸ்பாட்டிபை’ அறிமுகம் செய்துள்ள சேவை இது - https://listeningtogether.atspotify.com/
ஸ்பாட்டிபை சேவை மூலம், காப்புரிமை சிக்கல் இல்லாமல் இணையம் மூலம் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். எப்படி நெட்பிளிக்ஸ் திரைப்படங்களை ஸ்டீரிமிங் முறையில் பார்க்க உதவுகிறதோ, அதே போல ஸ்பாட்டிபை, ஸ்டீரிமிங் வடிவில் இசையை வழங்குகிறது.
ஸ்பாட்டிபை இப்போது, இணைந்து இசை கேட்பதற்கான சுவாரஸ்யமான வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதோ இந்த நொடியில், உலகில் வெவ்வேறு மூளையில் இருந்தபடி, இரண்டு வெவ்வேறு நபர்கள் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கும் பாடலை ஸ்பாட்டிபை அடையாளம் காட்டுகிறது.
ஸ்பாட்டிபை போன்ற வையம் தழுவிய சேவையில், கணந்தோறும் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பாடலை கேட்டு ரசித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் ஒரே பாடலை கேட்டுக்கொண்டிருக்கலாம். இப்படி ஒரே நேரத்தில் இரண்டு பேர் கேட்டு ரசிக்கும் பாடலை கண்டறிந்து சொல்லும் வகையில் இந்த லிஸ்னிங் டுகதர் வசதி அமைந்துள்ளது.
இதற்காக ஸ்பாட்டிபை உருவாக்கியுள்ள இணையதளத்தில் நுழைந்தால், முகப்பு பக்கத்தில் சுழன்று கொண்டிருக்கும் உலக உருண்டையில் இந்த வசதியை அணுகலாம்.
ஒவ்வொரு நொடிப்பொழுதிலும், உலகின் வெவ்வேறு இடங்களில் இருக்கும் இரண்டு பேர் ஒரே பாடலை ஸ்பாட்டிபையில் கேட்டுக்கொண்டிருப்பதை உலக உருண்டை மீது நாம் உணரலாம். இருவர் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த பாடல் ஒலிப்பதோடு, அந்த இரண்டு ரசிகர்கள் இருப்பிடமும் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றுக்கு இடையிலான தொலைவும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு ஒரே நேரத்தில் இருவர் கேட்கும் பாடல் மாறிக்கொண்டே இருக்கிறது. வெவ்வேறு பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஸ்பாட்டிபையில் புதிய இசைய கண்டறிவதற்கான சுவாரஸ்யமான வழியாகவும் இது அமைகிறது.
*
ஸ்பாட்டிபை போன்ற இசை சேவைகள் எந்த அளவுக்கு தரவுகள் சார்ந்ததாக மாறியிருக்கின்றன என்பதையும், தரவுகள் சார்ந்த கண்டுபிடிப்புகள் நம் ரசனை மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன என்பதையும் இந்த புதுமையான சேவை உணர்த்துகிறது.
*
நிற்க, இந்த சேவையின் பின்னணி கதையை சுருக்கமாக பார்க்கலாம். அமெரிக்கரான கெய்லி மெக்டொனால்டு எனும் டிஜிட்டல் கலைஞர் கடந்த 2014 ம் ஆண்டு ஸ்பாட்டிபை நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த பின், அந்த சேவையில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்களின் தரவுகள் அடிப்படையில் செரிண்டிபிட்டி எனும் வரைபட சேவையை உருவாக்கினார். ஒரே நேரத்தில் ஒரே பாடலை கேட்டு ரசிக்கும் இரண்டு ரசிகர்கள் இருப்பிடத்தை பூமி வரைபடத்தில் சுட்டிக்காட்டுவதாக இந்த சேவை அமைந்திருந்தது.
இடைப்பட்ட ஆண்டுகளில் ஸ்பாட்டிபை சேவை மேலும் பிரபலமாகி, அதன் பாடல்கள் சார்ந்த தரவுகளும் அதிகரித்துள்ள நிலையில், உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து இருவர் கேட்கும் பாடலை உடனுக்குடன் அளிக்கும் சேவையாக தற்போது லிஸ்னிங் டுகெதர் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த இணைய சேர்ந்திசையை கேட்டு ரசித்துவிட்டு, உங்கள் அனுபவைத்தை பகிருங்கள்!.
-
பி.கு: டிஜிட்டல் கலைஞரான கெய்லி மெக்டோனால்டு பற்றி தனியே இன்னொரு நாள் பார்க்கலாம். அவரது இணையதளம்: http://kylemcdonald.net/