வல்லுனர்களுடன் இணைக்கும் இணையதளம்
தகவல் சரி பார்ப்பு இணையதளங்களில், மெட்டாபேக்ட்.இயோ (https://metafact.io/) தளத்தை கொஞ்சம் புதுமையானது. கூட்டத்தின் ஆற்றல் மற்றும் வல்லுனர்களின் பார்வை இரண்டையும் இணைத்து, மருத்துவம் சார்ந்த விஷயங்களில், உண்மை நிலையை அறிய உதவுகிறது இந்த தளம்.
மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு நம்பகமான ஆதாரங்களை கொண்டு வந்து சேர்ப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வாழ்க்கை, சமூகம் மற்றும் தங்களைச்சுற்றியுள்ள உலகம் சார்ந்த, கேள்விகளை இந்த தளத்தின் மூலம் கேட்கலாம்.
இப்படி பல கேள்விகள் இருக்கலாம். ஏனெனில் தினசரி வாழ்க்கையில், பல விஷயங்களை நாம் தகவல்கள் அடிப்படையில் தான் மேற்கொள்கிறோம். நம்முடைய பழக்க வழக்கங்களுக்கும் தகவல்கள் சார்ந்த புரிதலே அடிப்படையாக அமைகின்றன.
ஆனால், இந்த தகவல்கள் எந்த அளவுக்கு சரியானவை என்று நமக்கு எப்படித்தெரியும். உதாரணமாக, வைட்டமின்களையே எடுத்துக்கொள்வோம். வைட்டமின்கள் தொடர்பாக பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. வைட்டமின் – சி துணை ஊட்டச்சத்துகள், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம் என ஒரு கருத்து இருக்கிறது. வைட்டமின் – சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என ஒரு கருத்து இருக்கிறது.
ஆனால், இவை எந்த அளவு சரியானவை? இவற்றுக்கு என்ன அடிப்படை என்பது நமக்குத்தெரியுமா? வைட்டமின் –சி தொடர்பான ஏதோ ஒரு கட்டுரையை படித்து விட்டு அல்லது யாரோ சொல்வதை கேட்டுவிட்டு, வைட்டமின் சி தொடர்பான அபிப்ராயம் கொண்டிருப்போம்.
இப்படி தான், உடல் ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்களில் நம் கருத்துகள் அமைகின்றன.
இந்த கருத்துகளின் மைய தகவல்கள் எந்த அளவு நம்பகமானவை என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த தளத்தில் அதை கேள்வியாக கேட்கலாம்.
இந்த கேள்விகளுக்கு, தொடர்புடைய ஆய்வாளர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட வல்லுனர்களின் பதில்களை தொகுத்தளிக்கிறது இந்த தளம். பல்வேறு வல்லுனர்கள் பதில்கள், அவர்கள் அளிக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலின் ஏற்புடைய தன்மைக்கான மதிப்பெண்ணையும் அளிக்கிறது.
மேலே சொன்ன வைட்டமின் – சி கேள்விகளையே எடுத்துக்கொள்வோம். வைட்டமின் –சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா எனும் கேள்விக்கு, 60 சதவீத ஒத்த கருத்து மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வல்லுனர்கள் பதில்களை படிக்கும் போது, ஆய்வு முடிவுகள் இந்த நோக்கில் அமைந்தாலும், உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதையும் அறிய முடிகிறது.
அதே போல, உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் –சி துணை ஊட்டச்சத்து அவசியமா எனும் கேள்விக்கு அப்படி எதுவும் இல்லை என தீர்மானமான பதிலை அறிய முடிகிறது.
இப்படி மருத்துவம் அல்லது ஆரோக்கியம் தொடர்பான எந்த கேள்வியையும் அதற்கான கருத்தை சுட்டிக்காட்டி கேட்டால், வல்லுனர்களின் பதிலை பெறலாம். புதிதாகவும் கேட்கலாம். ஏற்கனவே கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் பெரிய கண் திறப்பாக அமைவதை பார்க்கலாம்.
இந்த கேள்வி பதில்கள் மூலம், நிறைய ஆதார தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் பரவலாக நிலவும் தப்பான அபிப்ராயங்களில் இருந்தும் விடுபடலாம்.
இந்த தளம், தனக்கான வல்லுனர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. அவர்களின் பங்களிப்புடன், மருத்துவ தகவல்கள் சரி பார்க்கும் சேவையை வழங்கி வருகிறது.
இதன் முகப்பு பக்கத்தில், வரிசையாக கேள்விகள பார்க்கலாம். கேள்விகளை கிளிக் செய்தால் அவற்றுக்கான விளக்கமான பதில்களையும், ஆதாரங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக கேட்கப்பட்ட கேள்விகள், அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளையும் தனியே பார்க்கலாம்.
கேள்விகளை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.
தற்போது கொரோனா வைரஸ் உலகையே உலக்கி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான பல கேள்விகளுக்கான விளக்கங்களையும் பார்க்க முடிகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுமா? எனும் கேள்விக்கு, ஒத்த கருத்து சார்ந்த மதிப்பெண் 92 ஆக அமைந்துள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்கள், தடுப்பூசி தொடர்பான உண்மை நிலையை தெளிவாக உணர்த்துகின்றன. மருத்துவ நோக்கில் தடுப்பூசி விரைவில் கண்டுப்பிடிக்கப்படும் ஆனால் பொருளாதார நோக்கில் இது சாத்தியமில்லை என ஒரு பதில் அமைந்துள்ளது. இன்னொரு பதில், பல்வேறு நிலையில் உள்ள தடுப்பூசிகளை விளக்குகிறது.
இது தவிர, சீராய்வுகள் எனும் பிரிவில் பல்வேறு தலைப்புகளில் விரிவான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
சாமானியர்களின் கேள்விகள், வல்லுனர்கள் அளிக்கும் விளக்கங்கள் என இரண்டையும் இணைத்து தகவல் சார்ந்த உண்மையை விளக்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்த தளம், இணைய நிதி திரட்டும் மேடையான கிக்ஸ்டார்ட்டரில் ஒரு திட்டமாக முன் வைக்கப்பட்டு துவக்கப்பட்டது என்பது இந்த தளம் தொடர்பான கூடுதல் தகவல்.
-https://metafact.io/