உங்கள் திரைப்பட ரசனையை அலச உதவும் இணையதளம்!
திரையரங்குகளில் இருந்து நெட்பிளிக்ஸ் அரங்கில் படம் பார்க்கும் காலத்தில் இருக்கிறோம். நெட்பிளிக்சில் விரும்பிய நேரத்தில் விரும்பிய படத்தை பார்க்கலாம். இதனிடையே நெட்பிளிக்சில் நமக்கு பிடிக்க கூடிய திரைப்படங்களை பரிந்துரைக்கும்.
எல்லாம் சரி, நெட்பிளிக்சில் நாம் பார்க்கும் படங்களை எல்லாம், குறித்து வைத்துக்கொண்டு, நம் திரைப்பட ரசனையை அலசி ஆராய முடிந்தால் எப்படி இருக்கும்? இத்தகைய அனுபவத்தை தருவதற்காக என்றே, நோஷன் மூவிடிராக்கர் (https://notionmaestro.gumroad.com/l/notion-movie-tracker ) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மூலம், உங்கள் திரைப்பட பழக்கத்தை நீங்களே பின் தொடர்ந்து அலசி ஆராயலாம். இணைய படிவம் போல இருக்கும் இந்த சேவையை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும், அதில் ஒருவர் தான் பார்த்த, பார்க்க இருக்கும் படங்களை குறித்து கொள்ளலாம். அதே போல எந்த வகையான படங்களை பார்த்திருக்கிறோ, எந்த நட்சத்திரங்களுடைய படங்களை பார்க்கிறோம் என்றும் வகைப்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக இத்தகைய அலசல்கள் ஊடகங்களுக்கே சாத்தியம். ஆனால் தனிநபர்களும் தங்கள் திரைப்பட ரசனையை அலசி ஆராய இந்த சேவை உதவுகிறது. புதுயுக டிஜிட்டல் குறிப்பேடு என வர்ணிக்கப்படும் நோஷன் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது போலவே, புத்தக புழுக்கள் தங்கள் வாசிப்பு பழக்கத்தை பின் தொடர்வதற்கான சேவையும் உருவாக்கப்பட்டுள்ளது. நோஷன்மாஸ்டர் இணைய தளத்தில் இதே போல இன்னும் பல நோஷன் சார்ந்த பயனுள்ள உருவாக்கங்களை காணலாம்.
இவை கட்டணத்திற்கு உட்பட்டது. விரும்பிய தொகை அளிக்கும் வசதி உள்ளது.
இணையதளம்:
https://notionmaestro.gumroad.com/
· இந்த சேவையில் உள்ளது போல, நாம் பார்த்த திரைப்படங்களை பின் தொடர வழி செய்யும் அம்சம் கொண்ட ஐசெக்மூவிஸ் தளமும் இருக்கிறது. இது திரைப்பட ரசிகர்களுக்கான வலைப்பின்னல் இணையதளம்.