செய்திகள் வாசிப்பது சாட்ஜிபிடி!
செய்திகளின் முக்கியத்துவம் மாறுபடக்கூடியது என்றாலும், முக்கிய செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கு பதிலாக அமைகிறது நியுமினிமலிஸ்ட் (https://www.newsminimalist.com/) செய்தி தளம். இந்த தளம், நாள்தோறும் அன்றைய தினத்தின் முக்கிய செய்திகளை மட்டுமே அளிக்கிறது.
மற்ற தளங்கள் போல செய்திகளை வாரி இறைக்காமல், நச்சென தேர்வு செய்த முக்கிய செய்திகளை இணைப்புடன் முன்வைக்கிறது இந்த தளம்.
எந்த தளத்திற்கு சென்றாலும் ஒரே மாதிரியான செய்திகள், அவற்றில் பெரும்பாலானவை எந்தவிதத்திலும் முக்கியமில்லாதவை எனும் விமர்சன கருத்து கொண்டவர்கள் இந்த தளத்தை விரும்புவார்கள். ஏனெனில், இந்த தளத்தை உருவாக்கிய யாக்கின் வடிம் (https://twitter.com/yakhinvadim ) என்பவரும் இதே நோக்கத்துடன் தான் இந்த தளத்தை அமைத்துள்ளார்.
எல்லாம் சரி, இந்த தளம் தேர்வு செய்யும் செய்திகளை முக்கியமானது என எப்படி நம்புவது? செய்தி நிறுவனங்களையே முழுவதும் நம்ப முடியாத நிலையில் , ஒரு தனிநபர் தேர்வை எப்படி நம்புவது?
முக்கிய செய்திகளை தேர்வு செய்யும் முறை பற்றி தளத்தின் நிறுவனர் வடிம், தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
முக்கிய செய்திகளை தேர்வு செய்து அளிக்க, எல்லா செய்திகளையும் படிக்க வேண்டும் அல்லவா? இதற்காக தான் அவர் ஏஐ மென்பொருள் சாட்ஜிபிடி- 4 உதவியை நாடியுள்ளார். இந்த மென்பொருள் கொண்டு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செய்திகளை படிக்க வைத்து, அவற்றில் இருந்து முக்கிய செய்திகளை மட்டும் தேர்வு செய்து தருகிறார்.
செய்திகளை தேர்வு செய்வதற்காக சாட்ஜிபிடிக்கு செய்தி முக்கியத்துவத்திற்கு என அளவுகோளையும் உருவாக்கி தந்திருக்கிறார். அதன்படி, ஒன்று முதல் பத்து அளவுக்கோளில், ஆறு புள்ளிகளுக்கு மேல் முக்கியத்துவம் கொண்ட செய்திகள் மட்டுமே இந்த தளத்தில் இடம்பெறுகிறது.
செய்தி வடிகட்டலுக்கு சாட்ஜிபிடியை பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை எனத்தோன்றுகிறது. இந்த தளமும் அருமையாக இருக்கிறதா? என பயன்படுத்திப்பாருங்கள்.
-