என்ன படம் பார்க்கலாம் சொல் ஏஐ!
மூவிவைசர் இணையதளத்தை, ‘ரசிகர்கள் மனநிலைக்கு ஏற்ப அவர்கள் பார்க்க கூடிய திரைப்படங்களை பரிந்துரைக்கும் ஏஐ இணையதளம்’ என ஒற்றை வரியில் அறிமுகம் செய்துவிடலாம். ஆனால், இது ஏமாற்று வேலையாக தான் இருக்கும். ஏனெனில், ஏனெனில் இந்த தளம் எப்படி ஏஐ சேவையின் கீழ் வருகிறது எனத்தெரியவில்லை என்பது தான்.
இணையத்தில் புழங்கும் ரசிகர்களுக்கு, திரைப்பட பரிந்துரை தளங்கள் ஏற்கனவே பல இருப்பது தெரியும். அதிலும், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்டீரிமிங் சேவைகள் வருகைக்கு பின், இப்போது என்ன படம் பார்க்கலாம் என பரிந்துரைக்கும் வகை இணையதளங்கள் அதிகரித்துள்ளன.
திரைப்பட பரிந்துரை இணையதளங்கள் பெரும்பாலும் ஒரே வடிவமைப்பு, ஒரே விதமான உள்ளடக்க தொகுப்பை கொண்டிருப்பதை கவனிக்கலாம். அவற்றின் செயல்முறை உத்தி வேண்டுமானால் மாறுபடலாம்.
இந்த வரிசையில் மூவிவைசர் (https://moviewiser.com/en/ask_me ) புதிதாக அறிமுகம் ஆகியிருக்கிறதே தவிர அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அதன் முகப்பு பக்கத்தில், உங்களின் தற்போதைய மனநிலையை தெரிவிக்கும் படி கோரப்படுகிறது. ரசிகர்கள் மனநிலையை தெரிவித்தால், அதற்கேற்ற திரைப்படங்களை பட்டியலிட்டு, ஒவ்வொரு படத்தின் கதைச்சுருக்கம், நட்சத்திரங்கள், கலைஞர்கள் விவரங்களோடு, எந்த ஓடிடி மேடைகளில் பார்க்கலாம் எனும் தகவல் இடம்பெறுகின்றன.
இந்த பரிந்துரையில் எங்கிருந்து ஏஐ நுட்பம் வந்தது எனத்தெரியவில்லை. உண்மையில், ஏற்கனவே செயல்படும் பரிந்துரை தளங்கள் ஏதோ ஒரு வகையில் ஏஐ நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன. சொல்லப்போனால் தரவுகள் அடிப்படையில் இயந்திர பரிந்துரை என்பது சாட்ஜிபிடி வருகைக்கு முன்பே பரவலாக இருக்கிறது.
ஆக, மூவிவைசர் தளம் ஏஐ அலையை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வழக்கமான திரைப்பட பரிந்துரை சேவையில் ஏஐ அட்டையை ஒட்ட வைத்திருக்கிறதோ என நினைக்கத்தோன்றுகிறது.
என்ன ஒரு புத்திசாலித்தனம் என்றால், மூவிவைசர் பரிந்துரை அளிப்பதற்கு முன், நான் யோசிக்கிறேன் எனும் வாசகம் தோன்றுகிறது. இந்தியரம் யோசிக்கிறதாம்!
மற்றபடி இந்த தளத்தில் எந்த உற்சாகமும் இல்லை.
ஆக, ஏஐ சேவைகளை அணுகும் போது, முதலில் அது ஏஐ சேவை தானா அல்லது ஏஐ பச்சை குத்திக்கொண்டதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. ஏஐ சேவைகளை பட்டியலிடும் திரட்டி சேவைகளும், கேள்வியோ, விமர்சனமோ இல்லாமல் தான் ஏஐ சேவைகளை பட்டியலிட்டு அறிமுகம் செய்து கொண்டிருக்கின்றன என்பதால் நாம் தான் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
-