செய்யறிவை விளக்கும் ஒரு பக்க தளம்
ஏஐ தொடர்பான ஆகச்சிறந்த இணையதளம் என சாட்ஜிபிடியிடம் கேட்டால், டிபைன்-ஏஜிஐ.காம் (https://define-agi.com/ ) தளத்தை சுட்டிக்காட்டுமா என்று தெரியவில்லை. ஆனால், ஏஐ தொடர்பான ஆகச்சிறந்த ஒரு பக்க இணையதளமாக இது விளங்குகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
அடிப்படையில் காலவரிசை தளம் என்றாலும், காலவரிசை பட்டியலோடு, அதில் உள்ள முக்கிய சொற்களை விளக்குவதற்கான குறிப்புகளை மூலக்கட்டுரைகளுக்கான இணைப்புகளையும் கொண்டுள்ளது.
இந்த கால வரிசைக்கான தேவை தொடர்பான சிறு விளக்கமும் இடம் பெற்றுள்ளது.
சற்று நீளமான ஒரு பக்க இணையதளம் என்றால், இந்த தளத்தை ஒரு பார்வையில் கடந்து செல்ல முடியாது என்பதே விஷயம். இந்த தளம் தன்னில் மூழ்க வைக்கும் தன்மை கொண்டது என்பதோடு, மீண்டும் மீண்டும் வர வைக்கும் ஈர்ப்பும் கொண்டிருக்கிறது.
எனவே தான் இந்த தளத்தை செய்யறிவு தொடர்பான ஆகச்சிறந்த ஒரு பக்க தளம் என்று வர்ணிக்கு தோன்றுகிறது.
செய்யறிவு தொடர்பான ஆய்வில் ஈடுபட விரும்புகிறவர்களையும் சரி, செய்யறிவு தொடர்பாக அறிந்து கொள்ள விரும்புகிறவர்களையும் சரி, கட்டி இழக்கும், செறிவும், செழுமையும் கொண்ட எளிமையான தளம்.
இத்தனைக்கும் இது ஒரு துணை தளமாக உருவாக்கப்பட்டது என்பது தான் ஆச்சர்யம்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் அடுத்த இலக்கு என கருதப்படும், செயற்கை பொது நுண்ணறிவு (ஏஜிஐ) என்றால் என்ன விளங்கி கொள்ளும் வகையில் எழுதப்பட்ட நீள் கட்டுரைக்கு துணையாக, செயற்கை பொது நுண்ணறிவு தொடர்பான வரையறைகள் கடந்த 75 ஆண்டுகளில் எப்படி மாறி வந்திருக்கின்றன என்பதை விளக்கும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் செய்யறிவு தொடர்பான சில அடிப்படை அம்சங்களை குறிப்பிட்டாக வேண்டும். செய்யறிவு நுட்பம் ஆய்வகத்தில் இருந்து அன்றாட பயன்பாட்டிற்கு வரத்துவங்கி, வியப்பையும், மிரட்சியையும் ஏற்படுத்தியிருந்தாலும், செய்யறிவு தொடர்பான புரிதல் பலவிதமாக இருக்கின்றன. செய்யறிவுக்கு என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒற்றை வரையறை கிடையாது என்பதும், எது செய்யறிவு என்பதில் வல்லுனர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது என்பதும் இந்த புரிதலை மேலும் சிக்கலாக்குகிறது.
எனவே செய்யறிவு தொடர்பான எப்படி விளக்கம் அளிதாலும், அது போதாமை கொண்டதாக இருக்கும் என்பதோடு, ஏதேனும் ஒரு பக்க சார்பு கொண்டதாகவும் இருக்கலாம்.
இந்த குழப்பங்களை மீறி, செய்யறிவு தொடர்பான அடிப்படை அம்சங்களாக அதன் வகைகளை குறிப்பிடலாம். குறுகிய செய்யறிவு, பொது செய்யறிவு, மீயறிவு என மூன்று வகையான செய்யறிவு அமைகிறது. இதையே, பலவீனமான செய்யறிவு, பலமான செய்யறிவு என இரு பிரிவுகளாக சொல்லப்படுவதும் உண்டு.
செய்யறிவு பெரும் அளவுக்கு முன்னேறி வந்திருந்தாலும், இப்போது நாம் பயன்படுத்தும் செய்யறிவு நுட்பங்கள் எல்லாம் குறுகிய வகையைச் சேர்ந்தவை தான் என கருதப்படுகிறது. குறுகிய செய்யறிவு என்றால் வரம்புகள் கொண்டது என புரிந்து கொள்ளலாம்.
மாறாக, மனித அறிவுக்கு நிகராக அல்லது அருகாமையில் வரக்கூடிய அளவுக்கு செயல்படக்கூடிய ஆற்றல் செயற்கை பொது நுண்ணறிவு என கொள்ளப்படுகிறது. ஆங்கிலத்தில் சுருகக்மாக ஏஜிஐ என்கின்றனர்.
ஏஜிஐ சாத்தியமானால், அடுத்த கட்டமாக மனித அறிவை மிஞ்சக்கூடிய மீறியவு என்கின்றனர்.
மீயறிவை விட்டுவிடுங்கள், பொது நுண்ணறிவே சாத்தியமில்லை என்றும் கருதப்படுகிறது. மாறாக, இப்போது பரபரப்பாக பேசப்படும் ஆக்கத்திறன் ஏஐ, செயற்கை பொது நுண்ணறிவின் துவக்கமாக இருக்கலாம் என்று நம்புவர்களும் இருக்கின்றனர்.
ஓபன் ஏஐ உள்ளிட்ட பல ஆய்வுக்கூடங்கள் பொது செய்யறிவை எட்டிப்படிக்கும் அளவில் அடுத்த கட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த நம்பிக்கைகளும், ஆய்வுகளும் ஒரு பக்கம் இருக்க, எது செயற்கை பொது நுண்ணறிவு என்பதிலேயே சிக்கல் இருக்கிறது என்கிறார் ஜேமி. இவர் தான் இந்த ஒரு பக்க இணையதளத்தை அமைத்திருப்பவர்.
செயற்கை பொது நுண்ணறிவு தொடர்பான வரையறை எத்தனை சிக்கலானது என்பதை விவரிக்கும் வகையில் நீள் பதிவு ஒன்றை இவர் தனது செய்திமடலில் எழுதியிருக்கிறார். ஏஜிஐ என்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை என்பவர்,இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு ஏஐ நிறுவனமும், தங்கள் இலக்குகளுக்கு ஏற்ப வரையறை வைத்துள்ளதையும் குறிப்பிடுகிறார். இந்த கட்டுரைக்கு துணையாக, ஏஜிஐ வரையறை வரலாற்றில் எப்படி மாறி வந்திருக்கிறது என உணர்த்தும் வகையில், 1947 ல் ஆலன் டூரிங் முன் வைத்த விளக்கம் துவங்கி அண்மைக்கால ஏஜிஐ விளக்கம் வரை காலவரிசை பட்டியலில், விவரங்களை அளிக்கிறார்.
ஏஜிஐ மற்றும் ஏஐ நுட்பத்தின் நீள அகலங்களை புரிந்து கொள்ள இந்த இணைய பக்கம் உதவும்.
-