இப்படியும் பாட்காஸ்டிங் செய்யலாம்!
தனியார் வானொலிக்கும், தனி வானொலிக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் தனி வானொலி நடத்தலாம். பாட்காஸ்டிங் என்று அதற்கு பெயர். உங்கள் நிறுவனம் நினைத்தாலும், தனது ஊழியர்களுக்காக தனி வானொலி நடத்தலாம். அதற்கு உட்புற தகவல் தொடர்பு என பொருள்.
உண்மையில் பாட்காஸ்டிங்கின் பலவித பலன்களில் ஒன்று, அதை நிறுவனங்களுக்குள்ளான தகவல் தொடர்புக்கு பயன்படுத்திக்கொள்வது தான். இதை சாத்தியாமாக்கும் நோக்கத்துடன் டைவ்.எப்.எம் (https://dive.fm/ ) சேவை அறிமுகம் ஆகியுள்ளது.
எந்த ஒரு நிறுவனத்திலும், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அளவிலான உட்புற தகவல்தொடர்பு மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஊழியர்களை கொண்ட நிறுவனங்களில் இது இன்னும் அவசியம். ஊழியர்களுடனான தகவல் தொடர்புக்கு பொதுவாக நிறுவனங்கள் இமெயில், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை கையாண்டு வருகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் ஸ்லாக் போன்ற மெசேஜிங் சேவைகளையும் பயன்படுத்துகின்றன.
ஜூம் பாணியிலான வீடியோ சந்திப்புகளும் நிறுவனங்களால் தகவல் தொடர்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் தான், டைவ்.எப்.எம் சேவை வருகிறது. நிறுவன உள் தகவல் தொடர்பிற்கு, பாட்காஸ்ட்டிங்கை பயன்படுத்தலாம் என்கிறது இந்த சேவை. இதற்காக நிறுவனங்கள் தனி வானொலியை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது.
அதாவது, ஊழியர்களுடான தகவல் தொடர்பிற்காக நிறுவனங்கள் தனி வானொலியை நடத்த இந்த சேவை உதவுகிறது.
பாட்காஸ்டிங் என்பது வானொலியின் நவீன வடிவமாக விளங்குவதை நீங்கள் அறிந்திருக்கலாம். பாட்காஸ்ட்டிங் சேவை வாயிலாக எளிதாக இணைய வானொலி நிகழ்ச்சிகளை நடத்தலாம். சிறுகதை வாசிப்பு துவங்கி, செய்தி அலசல், ஊக்க உரை என எண்ணற்ற விதங்களில் பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.
பாட்காஸ்டிங் ஆதார அம்சங்களில் ஒன்று நிகழ்ச்சிக்கான ஆடியோ கோப்பை தேவையான சாதனத்தில் பெற்று விரும்பிய நேரத்தில் கேட்டுக்கொள்ளலாம் என்பதும், பயனர்கள் பதிலுக்கு உரையாடலாம் என்பதும் தான்.
இந்த வசதியை நிறுவனங்களும் தகவல் தொடர்பிற்காக பயன்படுத்திக்கொள்ள வழி செய்யும் நோக்கத்துடன் ’டைவ்.எப்.எம்’ செயல்படுகிறது. நிறுவனம் ஊழியர்களுக்காக என்று ஒரு வானொலி நடத்துவதாக இதை கற்பனை செய்து கொள்ளலாம். ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை இமெயில், குறுஞ்செய்தி வாயிலாக அனுப்புவதை விட, இணைய வானொலி வடிவில் வெளியிடலாம். ஊழியர்களும் அதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆடியோ வடிவில் தொடர்பு கொள்வதில் பலவித அணுகூலங்கள் இருப்பதாக டைவ்.எப்.எம் சொல்கிறது. மெயில்களை படிப்பதை விட, ஆடியோவில் கேட்பது எளிதாக இருப்பதோடு, தெளிவாகவும் இருக்கும். மேலும், இமெயில் அனுப்பும் போது, ஏற்படக்கூடிய எழுத்து பிழை பிரச்சனைகள் ஒலிப்பதிவில் இருக்காது.
மேலதிகாரி அல்லது தலைமை அதிகாரி, நிறுவன செய்தியை பேசி ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பாட்காஸ்ட்டிங் சேவை தனிப்பட்ட தன்மை கொண்டிருப்பதால், நிறுவன தகவல்களை கதை சொல்வது போல பகிர்ந்து கொண்டு கவனத்தை ஈர்க்கலாம். தகவல்களை பகிர்வதோடு, புதிய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இணைய வானொலி வடிவம் உதவியாக இருக்கும்.
இவ்வளவு ஏன், ஊழியர்களும் பதில் சொல்லும் சாத்தியம் இருப்பதால், நிறுவன ஆலோசனை கூட்டங்களை கூட ஆடியோ வடிவில் நடத்திக்கொள்ளலாம். இன்னும் பல சாதகங்கள் இருப்பதாக சொல்கிறது டைவ்.எப்.எம்.
கட்டணச்சேவை என்றாலும், பயனுள்ளதாகவே இருக்கிறது.
-
நிறுவனங்கள் தகவல் தொடர்பிற்காக ஆடியோவை பயன்படுத்த வழி செய்யும் மற்றொரு சேவை: https://cybersimman.substack.com/p/4c0