ரெட்டிட் சார்ந்த இணையதளங்கள் எத்தனை இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால், இந்த பட்டியலில் ’பெஸ்ட் ஆப் ஏஎம்ஏ.காம்’ (https://bestofama.com/ ) தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ரெட்டிட் பிரியர்களுக்கும், ரெட்டிட்டை அறிந்தவர்களுக்கும், குறிப்பாக ரெட்டிட் கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ’அமா’வை அறிந்தவர்களுக்கு இந்த தளம் ஈர்ப்புடையதாக இருக்கும்.
ரெட்டிட் அந்நியர்கள், ’அமா’ என்றால் என்ன என குழம்ப வேண்டாம். ஆங்கிலத்தில் ஆஸ்க் மீ எனிதிங்க் என சொல்லப்படுவதன் தமிழ் சுருக்கம் தான் ‘அமா’. (ama). தமிழில் இதை இன்னும் அழகாக, ’என்னிடம் எதுவும் கேளுங்கள்’ என சொல்லலாம். மக்கள் மன்றத்தின் முன் நின்று பதில் சொல்வது போல, ரெட்டிட் சமூகத்தில் தோன்றி அதன் உறுப்பினர்கள் கேட்கும் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்லும் நிகழ்வே, இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
அமா நிகழ்வை இணைய அரட்டை என்றும் சொல்லலாம். அதாவது உறுப்பினர்கள் அரட்டை வாயிலாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது. எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், எந்த கேள்வியையும் கேட்கலாம் என்பதும், அவற்றுக்கு பதில் அளிக்கப்படும் என்பதும் இந்த நிகழ்வின் தனிச்சிறப்பு.
அமாவுக்கு என்று தனி வரலாறு இருந்தாலும், இணையத்தை பொருத்தவரை, ரெட்டிட் தளத்தில் தான் இது பிரபலமானது. ரெட்டிட் வெறும் தளம் அல்ல, துடிப்பான இணைய சமூகம் என்பதால் அதில் எப்போதும் எண்ணற்ற தலைப்புகளில் விவாதங்களும், கருத்து பரிமாற்றங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். ரெட்டிட் குழுக்கள், துணை குழுக்கள் என லட்சக்கணக்கில் இருக்கின்றன. இதன் காரணமாக இணையத்தின் மக்கள் மன்றமாக ரெட்டிட் இருப்பதாகவும் கருதலாம்.
ரெட்டிட் இணையத்தின் மக்கள் மன்றமாக இருப்பதால், அதன் முன் தோன்றி பதில் அளிக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே தான் என்னிடம் எதுவும் கேட்கலாம் என அழைப்பு விடுக்கும் அமா நிகழ்வு மிக பிரபலமாகவும், ரெட்டிட் தளத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.
ரெட்டிட் செல்வாக்கு காரணமாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் கூட இந்த மன்றத்தில் ஆஜாராகி பதில் சொல்லியிருக்கின்றனர்.
செல்வாக்கு மிக்க பிரபலங்கள் இப்படி ரெட்டிட் மன்றத்தில் கைகட்டி நின்று(!) பதில் சொல்வது ரெட்டிட்டின் செல்வாக்கிற்கு அடையாளமாக இருக்கிறது.
இனி விஷயத்திற்கு வருவோம். இப்படி ரெட்டிட் மன்றத்தில் நிகழும் சிறந்த அமா நிகழ்வுகளை எல்லாம் தொகுத்தளிக்கும் தளமாக, ’பெஸ்ட் ஆப் ஏஎம்ஏ.காம்’ விளங்குகிறது. ரெட்டிட் தளத்தில் அரங்கேறும் அமா கேள்வி பதில் நிகழ்வுகளை இந்த தளத்தில் வரிசையாக பார்க்கலாம். பிரபலங்கள் மட்டும் சாமானியர்களும் அமா நிகழ்வுகளில் தோன்றுகின்றனர். பலரும் இந்த மன்றத்தில் தோன்றி தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டு, கேளுங்கள் என சொல்வதை பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது.
உதாரணத்திற்கு அண்மையில் ஒருவர், தாயின் திடீர் மரணத்திற்கு பிறகு உண்டாக சோகத்தை மறக்க, நாடு முழுவதும் பயணம் செய்து துயர் ஆலோசகர்களை சந்தித்து பேசியிருக்கிறேன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.
-
ஜெயகாந்தன் அல்லது பிரபஞ்சன், ரெட்டிட் மன்றத்தில் தோன்றி, உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையோடு இந்த பதிவை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.
மிக்க நன்றி புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியதிற்கு!ஒரு கேள்வி... ஜெயகாந்தன் மற்றும் பிரபஞ்சன் பெயர்களை தற்போது தேர்ந்ததெடுத்தின் காரணம் என்னவோ? எழுத்தாளர் ஜெயமோகன் இந்த ரெட்இட் தளத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என நினைக்கிறேன்!
புதிய தகவல்,பயனுள்ள தகவல். தொடர்ந்து இணையம்தொடர்பாக பல்வேறு தகவல்களை அளித்து வரும் தங்களின் சேவை பாராட்டத்தக்கது. இந்து தமிழ் நாளிதழில் இடையில் சில கட்டுரைகளை தவிர்த்து தங்களது கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிக்கும் பத்திரிகையாளர்களில் ஒருவர்.