கவிதை எழுத மார்கோவ் வழி!
இப்போது நாம் பார்க்க இருக்கும் இணைய பக்கம் எளிமையானது என்றாலும், ஏஐ தொடர்பான பல்வேறு சிந்தனைகளையும், கேள்விகளையும் உண்டாக்க கூடியது. ஏனெனில், இந்த தளம், ஆங்கிலத்தில் கவிதைகளை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. மார்கோவ் சங்கிலி மூலம் இதை சாத்தியமாக்குகிறது. அதற்கேற்ப இதன் பெயரும், மார்கோவியருவாக்கம். (http://mariechatfield.com/markomposition/about.html )
மார்கோவ் சங்கிலி என்பது ரஷ்ய கணித மேதை ஆண்ட்ரி மார்கோவ் (Andrey Markov ) பெயரால் வழங்கப்படும் நவீன கோட்பாடு. நிகழ்தகழ்வு அடிப்படையிலான இந்த கோட்பாட்டை, பல்வேறு நிலைகளையும், அவற்றுக்கு இடையிலான மாற்றங்களையும் கொண்டு ஒரு சங்கிலியை உருவாக்கலாம் என்பதாகும். இதில் அடுத்து வரும் நிலை என்பது முந்தைய நிலைகள் சாராமல், தற்போதைய நிலை மட்டும் சார்ந்திருக்கும் என்பதால், நிலைகளுக்கு இடையிலான மாற்றங்களை எளிதாக நிகழ்தகழ்வு அடிப்படையில் சங்கிலியாக அமைத்துக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, மழை மற்றும் வெய்யில் எனும் நிலைகளை கொண்டு, நாளை அல்லது நாளை மறுநாள் மழை வருமா அல்லது வெய்யில் காயுமா? என கணிப்பதற்கான சங்கிலியை உருவாக்கலாம்.
நிலைகள் மற்றும் மாற்றங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த சங்கிலித்தொடர் சிக்கலாகலாம் என்றாலும், அடிப்படை அம்சம், தற்போதையை நிலை மட்டுமே அடுத்த மாற்றத்தை தீர்மானிக்கிறது என்பதாகும்.
மார்கோவ் சங்கிலி தொடர்பாக இன்னமும் ஆழமாகவும் விரிவாகவும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதைக்கு, மார்கோவ் கவிதை உருவாக்கினிக்கு வருவோம். மேலே குறிப்பிட்ட இணைய பக்கம், ஆங்கில ஆக்கங்களில் இருந்து மார்கோவ் சங்கிலியை உருவாக்கி கொண்டு அதன் மூலம், கவிதைகளை உருவாக்கித்தருகிறது.
அந்த வகையில் இந்த இணைய பக்கத்தை, கவிதை இயற்றிகள் (generator) என சொல்லலாம். ஏஐ யுகத்தில் இப்போது பிரபலமாக இருக்கும், உருவ உருவாக்கினிகள், எழுத்து உருவாக்கினிகள் போல, இந்த தளம் கவிதைகளை செயற்கை ஆக்கமாக உருவாக்கித்தருகிறது.
சாட்ஜிபிடி, கிளாடு போன்ற ஏஐ சாட்பாட்கள் இதில் கரை கண்டவை என்றாலும், இந்த மார்கோவியருவாக்கம் இணைய பக்கம், சாட்ஜிபிடி பரபரப்புக்கு எல்லாம் முன்பே உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.
மார்கோவ் சங்கிலி கொண்டு, எழுத்து வடிவ ஆக்கங்களை உருவாக்கும் பல்வேறு இணயதளங்களில் ஒன்றாக இது அமைகிறது.
இந்த தளத்தில், குடென்பர்க்.ஆர்க் தளத்தில் இருந்து ஆங்கில ஆக்கங்களை சமர்பித்து மார்கோவ் சங்கிலி- கவிதைகளை உருவாக்கலாம் அல்லது பயனாளிகளே ஆங்கில ஆக்கத்தை சமர்பித்து அதிலிருந்து, ஹைகூ அல்லது வேறு வடிவிலான கவிதைகளை உருவாக்கி கொள்ளலாம்.
மார்கோவ் சங்கிலி தொடர்பான விளக்கமும் இடம்பெற்றுள்ளது. மார்கோவ் சங்கிலி உருவாக்க உதவும் நவீன மொழியியல் அகராதிக்கான இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
மார்கோவ் சங்கிலி கோட்பாடு கொண்டு கவிதைகளை உருவாக்கலாம் எனும் போது சாட்ஜிபிடி போன்றவற்றின் ஆக்கத்திறன் பற்றி ஏன் இத்தனை பரபரப்பு மற்றும் மிகை கூற்றுகள்?
சாட்ஜிபிடி பின்னே உள்ள மொழி மாதிரி நுட்பத்தை வெறும் மார்கோவ் சங்கிலி என சுருக்கிவிட முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால், மொழி மாதிரிகளை விளங்கி கொள்ள மார்கோவ் சங்கிலி கோட்பாடு தொடர்பான புரிந்தல் உதவலாம். அந்த வகையில் எளிய தளம் என்றாலும் ஏஐ காலத்தில் கவனத்தை ஈர்க்கும் இணைய பக்கம்.