ஊக்கம் அளிக்கும் செய் நூல்களுக்கான இணையதளம்
நீங்கள் சுய முன்னேற்ற நூல்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் உற்பத்தி ஊக்குவிப்பு புத்தகங்களை அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் செய் தூண்டுதல் புத்தகங்கள் எனும் புதிய வகை இருப்பதை அறிவீர்களா?
தி டூ புக் (https://thedobook.co/) எனும் பெயரிலான இணையதளம் தான் இத்தகைய செய் தூண்டுதல் புத்தகங்களை வழங்கி வருகிறது.
படிக்கும் போது ஊக்கம் அளிப்பதாக அமைவதோடு, அந்த ஊக்கத்தின் பயனாக செயல்படத்தூண்டடுவதை நோக்கமாக கொண்டுள்ளதால் இந்த புத்தகங்கள் செய் புத்தகம் என குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு புத்தகமும், விளக்க ஓவியங்களுடன் எளிதாக வாசித்து முடிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அறிய முடிகிறது.
ஒவ்வொரு புத்தகமும், செய் எனும் சொல்லுடன், அதற்கான தனி தலைப்பை கொண்டுள்ளது. மாற்றத்தை ஏற்படுத்துவது துவங்கி, தனியே தொழில் துவங்குவது வரை பலவிதமான தலைப்புகளில் ஊக்கம் தரும் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தகங்களின் விவரிப்பும், வடிவமைப்புமே அவற்றை படிக்கத்தூண்டுகின்றன. எந்த புத்தகமும் இலவசம் இல்லை. கட்டணம் செலுத்தி மின்னூல் உள்ளிட்ட வடிவங்களில் வாசிக்கலாம்.
இந்த தளத்தின் பத்தாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், வாழ்வியலுக்கான புத்தகம் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது.
வணிக நெடி இல்லாத, ஊக்கம் அளிக்கும் புத்தகங்களாக இவை தோன்றுகின்றன.
செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கும் ’செய் உரைகள்’ (https://thedolectures.com/) எனும் இணையதளத்தில் இருந்து இந்த இணைய புத்தக பதிப்பு தளம் உருவாகியுள்ளது.