முட்டாள்களின் மின்னஞ்சல் இணையதளம் !
உங்களிடம் ஒரு பத்து நிமிடம் இருக்கிறதா? எனில் அதில் சில நிமிடங்களை இணைய கொறிப்பிற்காக ஒதுக்கி, டோண்ட் ஈவன் ரிப்ளை (http://www.dontevenreply.com/index.php) இணையதளத்திற்கு சென்று பாருங்கள். பத்தாண்டுகளுக்கு மேல் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை மீறி இந்த பழைய இணையதளம் உங்களை கவர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் உங்களை சிரிப்பலை அல்லது புன்சிரிப்பில் ஆழ்த்தி கொஞ்சம் இளைப்பாறவும் செய்யும்.
இந்த இணையதளம், இமெயில்களின் தொகுப்பு. மகத்தானவர்களின் கடிதங்கள் போல, மகத்தானவர்கள் இமெயில்களின் தொகுப்பு அல்ல: மாறாக, இந்த தளத்தின் உரிமையாளர் இணைய வரி விளம்பரங்களை பார்த்து அனுப்பி வைத்த வம்பு வழக்கு மெயில்களின் தொகுப்பு!
ஆம், இந்த தளத்தின் தனிச்சிறப்பும் (!), நோக்கமும் வரி விளம்பரங்களுக்கு காரணமே இல்லாமல் பதில் அளித்து வம்பு வளர்ப்பது தான்.
’கிரேக்லிஸ்ட்’ வரி விளம்பர தளத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த தளத்தில் இருந்து ஏதேனும் ஒரு விளம்பரத்தை தேர்வு செய்தும், அதை வெளியிட்டவரிடம் இமெயிலில் இஷ்டத்திற்கு கேள்விகள் கேட்டு அவரை வெறுத்துப்போக வைத்து, அந்த பரிவர்த்தனையை இந்த தளத்தில் பதிவு செய்து வந்திருக்கிறார்.
வரி விளம்பரம் செய்பவருடன் இமெயில் குசும்பு செய்வது தான் நோக்கம் என்றாலும், அதற்கேற்ற பொருத்தமான விளம்பரங்களையே தேர்வு செய்திருப்பது போல தோன்றுகிறது. உதாரணத்திற்கு, இளம் பெண் ஒருவர் முக்கிய ஆவணத்தை புளோரிடாவில் தவறவிட்டுவிட்டேன், கண்டுபிடித்தவர்கள் தொடர்பு கொள்ளவும் என்பது போல ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார். இதற்கு பதிலாக, ஹோட்டல் பில், உணவு ரசீது போன்றவற்றை எல்லாம் கண்டேன் உங்களுடையதா என கேட்டு தொடர்ந்து பதில் மெயில் அனுப்பி, கடைசியில், என்ன வெறுப்பேற்றுகிறீர்களா? என கேட்க வைத்திருக்கிறார்.
மொக்கையாக விளம்பரம் வெளியிட்டவர்களை நையாண்டி செய்வது தான் நோக்கம் என்று நினைக்கத்தோன்றுகிறது.
விளம்பரங்களோடு, இத்தகைய மெயில் உரையாடல்களை படித்துப்பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்த தளத்தை நிறுவியவர், முட்டாளின் இமெயில் (Emails from an A**hole: Real People Being Stupid ) எனும் புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார். இந்த புத்தகம் பற்றி தகவல்களை தேடிய போது, John Lindsay என்பவர் இந்த தளத்தை 2009 முதல் நடத்தி வந்ததும், இதில் வெளியான இமெயில் உரையாட்களில் மிகச்சிறந்தவற்றை தேர்வு செய்து, மேலும் பல புதிய உரையாடல்களுடன் புத்தகத்தை எழுதியிருப்பதாக அறிய முடிகிறது.
அறிமுகமான காலத்தில் இந்த இணையதளம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
-
பி.கு: நான் இணைய ரசிகன். எல்லா வகையான இணையதளங்களையும் அறிமுகம் செய்வதில் விருப்பம் அதிகம். அந்த வகையில், பயனில்லாமல் இருந்தாலும், புத்திசாலித்தனமானை இணையதளங்கள் பற்றி எழுதுவதிலும் விருப்பம் உண்டு. எனினும், இணையதளங்கள் என்றால் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காக, இதோ ஒரு பயனுள்ள இணையதளம் பற்றிய அறிமுகம்:
-
சுவாரஸ்யமாக நட்பு வளர்க்கும் செயலி!
ஹூக்ளி (https://www.hoogly.com/ ) எனும் புதிய சமூக வலைப்பின்னல் செயலி அறிமுகம் ஆகியிருக்கிறது. மற்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட வகையில் நட்பு வளர்க்க வழி செய்வதாக இந்த செயலி சொல்கிறது.
பயனாளிகள் வாழ்க்கையில் இருந்து பகிரக்கூடிய ஒரு தருணத்தை தேர்வு செய்து, அதை டைரி எழுதுவது போல முதலில் எழுதச்சொல்கிறது. இதற்காக உங்களுக்குள் மூழ்கி கொஞ்சம் யோசியுங்கள் என்கிறது. அதன் பிறகு, அந்த உணர்வை நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளச்சொல்கிறது. இது நட்பை வலுவாக்க உதவும். அந்த நண்பர்களும் இந்த செயலியில் இருக்க வேண்டும்.
மூன்றாவது கட்டமாக விரும்பினால், உங்கள் உணர்வு போலவே உணர்வு கொண்ட செயலியின் மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்களோடு உங்கள் தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஒரே விதமான உணர்வின் அடிப்படையில் நட்பு வளர்த்துக்கொள்ளலாம் என்கிறது இந்த செயலி.