இந்த தளம் பாடல் பட்டியல்களுக்கான பேஸ்புக்
இசைப் பிரியர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தக்கூடிய தளமாக செட்லிஸ்ட்டை (https://www.setlist.fm/ ) அறிமுகம் செய்யலாம். இசைமயமான இணையதளம் மட்டும் அல்ல, இசை பிரியர்களுக்கான சங்கமும் தான். அதாவது இந்த தளத்தை இசை ரசிகர்களுக்கான பேஸ்புக் என்றும் வர்ணிக்கலாம்.
செட்லிஸ்ட் சேவையின் சமூக அம்சங்களே இப்படி பேஸ்புக்குடன் ஒப்பிட வைக்கிறது என்றாலும், இசை ரசிகர்கள் பார்வையில் இந்த தளம் பேஸ்புக்கிற்கு மேல். உண்மையில், இசை ஆர்வலர்கள் பேஸ்புக் போன்ற தளங்களில் புழங்குவதை விட செட்லிஸ்ட் போன்ற சேவைகள் பக்கம் வர வேண்டும்.
செட்லிஸ்ட்டில் அப்படி என்ன சிறப்பு என்று பார்க்கும் முன், முதலில் செட்லிஸ்ட் என்பது இசை உலகில், நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்களின் பட்டியலை குறிக்கும் சொல் என்பதை நினைவில் கொள்வது நல்லது.
என்ன தான் எம்பி3 யிலும், ஸ்டிரீமிங் சேவைகளிலும் பாடல்களை கேட்டாலும், இசை நிகழ்ச்சிக்கு நேரில் சென்று கேட்டு ரசிப்பதை போல வராது என கருதும், தீவிர ரசிகர்களுக்கான சேவை இது.
இசை சார்ந்த இணையதளங்களில், சமூக வலைப்பின்னல் அம்சங்கள் கொண்ட சேவைகளும் பல இருந்தாலும், செட்லிஸ்ட், பாடல் பட்டியல்கள் அடிப்படையில் ரசிகர்களை இணைக்கும் தளமாக அமைகிறது. இந்த சேவையில் செட்லிஸ்ட் அதாவது பாடல் பட்டியல்கள் தான் எல்லாமும்.
ஆம், இந்த தளம் இசை நிகழ்ச்சிகளின் பாடல் பட்டியல்களை பகிர்ந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் வழி செய்கிறது. அந்த வகையில் விக்கி பாணியிலான தளமாக திகழ்கிறது.
ரசிகர்கள் தங்கள் அபிமான பாடகர்களின் பாடல் பட்டியல்களை இந்த தளத்தில் பலவிதமாக அணுகலாம். தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் பாடகர் பெயரை டைப் செய்து தேடினால், வரிசையாக தொடர்புடைய பாடல் பட்டியல்கள் தோன்றுகின்றன. எந்த இடத்தில் எந்த நிகழ்ச்சியின் பாடல்கள் என்பதை அறிவதோடு, இனி வர இருக்கும் நிகழ்ச்சிகளில் பாட உள்ள பட்டியலையும் அறியலாம். பட்டியல்களை பலவிதமான வடிகட்டல்கள் கொண்டும் தேடலாம்.
ரசிகர்கள் விரும்பினால், தாங்களும் பாடல் பட்டியலை உருவாக்கி சமர்பிக்கலாம். ஏற்கனவே உள்ள பட்டியலை திருத்தலாம்.
இப்படி, பாடகர்கள், இசைவிழாக்கள், இடங்கள் என தனித்தனி தலைப்புகளில் பாடல் பட்டியலை அணுகலாம். இசைவிழாக்கள் பகுதியில் உலகம் முழுவதும் நடைபெறும் இசைவிழாக்கள் சார்ந்த பாடல் பட்டியகளை பார்க்காலம்.
பாடல் பட்டியல் தவிர, தொடர்புடைய செய்திகளையும் அணுகலாம். ரசிகர்கள் பாடல் பட்டியல் சார்ந்து கருத்து தெரிவித்து பரஸ்பரம் உரையாடலாம்.
ரசிகர்களின் பங்கேற்பிற்கு ஏற்ப, முன்னணி ரசிகர்களின் பட்டியலும் இடம்பெறுகிறது. முன்னணி மற்றும் பிரபலமான பாடல் பட்டியல்களையும் காணலாம். அண்மை திருத்தங்கள், எதிர்கால நிகழ்ச்சிகள் பகுதிகள் மூலமும் தகவல்களை அணுகலாம்.
வெறும் பட்டியல்கள் கொண்டு இத்தனை செறிவான இசை அனுபவமா என வியக்க வைக்கும் தளம், உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள்!
-