ஆயிரமாயிரம் எழுத்துருக்களை கொண்ட இணையதளம்
இணைய உலகில் ஆயிரமாயிரம் எழுத்துருக்கள் (fonts) இருக்கின்றன. அவற்றை தேடி கண்டறிய வழி செய்கிறது 1001பாண்ட்ஸ்.காம் (https://www.1001fonts.com/). ஆயிரத்து ஒரு இரவுகள் போல ஆயிரத்து ஒரு எழுத்துருக்கள் என பொருள் தரும் இந்த இணையதளத்தை, எழுத்துருக்களுக்கான தேடியந்திரம் என வர்ணிக்கலாமா அல்லது எழுத்துருக்களுக்கான கையேடு என குறிப்பிடலாமா எனத்தெரியவில்லை.
இந்த தளத்தில் எழுத்துருக்களை தேடலாம். அதே நேரத்தில் விதவிதமான எழுத்துருக்களையும் அணுகலாம். எந்த வகை எழுத்துரு தேவை என இதன் தேடல் கட்டத்தில் டைப் செய்து தேடலாம். தவிர இதன் பட்டியலில் உள்ள எழுத்துரு வகைகளையும் அணுகலாம்.
எழுத்துரு வகைகளை இந்த தளம் முன்னிறுத்தும் விதத்தை வடிவமைப்பு அற்புதம் என்று சொல்லலாம். தேடல் கட்டத்தின் கீழ், பிரதி, காட்சிப்படுத்தல், நவீனம், கையெழுத்து, லோகோ வகை என தேர்வுகள் தோன்றுகின்றன. இவற்றில் தேவையானதை தேர்வு செய்து தேடலாம்.
கையெழுத்து சார்ந்த எழுத்துரு தேவை எனில் அவற்றை மட்டும் தேடலாம். இந்த பட்டியலையே இன்னும் விரிவாக்கி கொள்ளலாம்.
இதைத்தவிர, எழுத்துரு வகைகள் எனும் பகுதியை அணுகினால், பொதுவான எழுத்துருக்கள் தவிர, எழுத்துரு அளவு, வெளியான காலம், அதன் எடை, அகலம் என பலவித தலைப்புகளில் தேடலை மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான எழுத்துருக்கள் உள்ளிட்ட தலைப்புகளும் இருக்கின்றன.
எழுத்துரு ஆர்வலர்கள் என்றால், இதன் முகப்பு பக்கத்தில் தோன்றும் எழுத்துரு பட்டியலை கிளிக் செய்து ஒவ்வொரு எழுத்துருவாக பார்த்துக்கோண்டே செல்லலாம்.
குறிப்பிட்ட எழுத்துருவை தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. எழுத்துரு உரிமம் கொண்டவையா அல்லது இலவச பயன்பாட்டிற்கு உரியவையா என குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமம் தொடர்பாக கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்சம், எழுத்துருக்களை தேடும் போது, கண்டறியும் எழுத்துரு எப்படி இருக்கும் என்பதை நமக்கான வாசகங்களில் சோதித்துப்பார்க்கலாம்.
இந்த தளத்தை உருவாக்கிய தனிநபர் அல்லது நிறுவனத்தின் பெயர் குறித்த தகவல்கள் இல்லாததை மீறி நம்பகமான தளமாகவே தோன்றுகிறது. புதிய எழுத்துருக்களையும் சமர்பிக்கும் வசதி இருக்கிறது.