ஆங்கில மொழி வரலாறு சொல்லும் இணையதளம்!
கெவின் ஸ்டிரவுட்டிற்கு (Kevin Stroud) எஸ்.இ.ஓ தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால் அவருக்கு ஆங்கிலமும், அதன் வரலாறும் நன்றாக தெரியும் என்றுத் தெரிகிறது. அதோடு அவருக்கு கூகுளிடம் இருந்து முறையான, நியாயமான அங்கீகாரமும் கிடைத்திருப்பது தெரிகிறது.
அதாவது, கெவின் ஸ்டிராவுட் என கூகுளில் தேடினால், அவரது ஆங்கில மொழி பாட்காஸ்டிங் (https://historyofenglishpodcast.com/about/ ) இணையதளம் முதலில் தோன்றுகிறது. தனிநபர்களின் பெயரை கூகுளில் தேடினால், அவர்களின் சொந்த இணையதளம் முதலில் தோன்றுவது இயல்பாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் பல்வேறு காரணங்களினால் இவ்வாறு நிகழ்வதில்லை என்பதே விஷயம்.
பல தருணங்களில் இதற்கு கூகுள் விளம்பர உத்தி தேவைப்படுகிறது அல்லது எஸ்.இ.ஓ உத்தி தேவைப்படுகிறது. எஸ்.இ.ஓ திறன் கொண்டு வேறு இணையதளங்கள் முன்னிலை பெறும் போது, பொருத்தமான இணையதளங்கள் பின்னுக்குத்தள்ளப்படுவது தான் கூகுள் யதார்த்தமாக இருக்கிறது.
ஆனால், கெவின் ஸ்டிரவுட் விஷயத்தில் இவ்வாறு எல்லாம் நிகழாமல், அவரைபற்றி தேடும் போது, அவரது சொந்த இணையதளம் முன்னிலை பெறுவது ஆச்சர்யம் தான். எனினும், இதற்கு எஸ்.இ.ஓ உத்திகளால் அந்த தளம் நிறைந்திருப்பதாக சொல்வதற்கில்லை. ஸ்டிரவுட் அது பற்றி எல்லாம் கவலைப்படுபவராகவும் தெரியவில்லை.
ஸ்டிரவுட் மொழியியல் வல்லுனராக இருக்கிறார். ஆங்கில மொழியின் தோற்றம் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் விளக்கி கூறும் ஹிஸ்டரி ஆப் இங்க்லிஷ் பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பாட்காஸ்டிங் துறையில் இந்த நிகழ்ச்சி பிரபலமாக இருக்கிறது. ஆங்கில மொழி ஆர்வலர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி விரும்பி கேட்கப்படுவதே இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஆங்கில மொழி வரலாற்றில் தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை அறிமுக பக்கத்தில் எளிமையாக விவரிக்கும் ஸ்டிரவுட் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஆங்கில மொழி தொடர்பான நுட்பமான விஷயங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார். மொழியியல் நோக்கில் இவை தகவல் சுரங்மாகவும் அமைவதை உணர முடிகிறது.
மொழியியல் சார்ந்த்த இன்னும் பல செழுமையான பாட்காஸ்டிங் நிகழ்ச்சி தளங்கள் இருக்கின்றன. இது தொடர்பான ஒரு பரிந்துரை பட்டியலில் இருந்து தான் கெவின் ஸ்டிரவுட் தளத்தை அறிய முடிந்தது.
மொழி ஆர்வம் கொண்டவர்களும் சரி, பாட்காஸ்டிங் ஆர்வம் கொண்டவர்களும் சரி, ஸ்டிரவுட் தளத்தை பின் தொடரலாம். ஆங்கில வரலாற்றின் மீது ஆர்வம் கொள்வதோடு, பாட்காஸ்டிங் எனும் இணைய ஒலி வடிவத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
-