கோட்மெண்டர் (https://www.codementor.io/ ) இணையதளம் எல்லோருக்குமானது அல்ல, மென்பொருள் வல்லுனர்களுக்கானது. மென்பொருள் வல்லுனர்களிலும் குறிப்பாக, வழிகாட்டுதல் நாடுபவர்களும், வழிகாட்டுதல் நல்குபவர்களுக்குமானது. இந்த இரு பிரிவினரையும் இணைக்கும் இணைய பாலமாக இந்த தளம் செயல்படுகிறது.
மென்பொருள் தொடர்பான வழிகாட்டுதல்களை பெறுவதற்கான இணைய மேடை என்றும் இந்த தளத்தை வர்ணிக்கலாம். மென்பொருள் புதியவர்கள் தங்கள் உருவாக்கம் தொடர்பான தெளிவை பெற விரும்பினால், இந்த தளம் வாயிலாக அதற்கான வழிகாட்டிகளை அணுகலாம். அதாவது, அவர்கள் எழுதியிருக்கும் நிரலில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான ஆலோசனகளை அனுபவம் வாய்ந்த டெவலப்பர்களிடம் இருந்து பெறலாம்.
வழிகாட்டி தேவை எனும் பகுதி வாயிலாக வல்லுனர்களை அணுகி, பொதுவான ஆலோசனை அல்லது நேரிடையான குறை தீர்ப்பில் ஈடுபடலாம். தொடர் வழிகாட்டுதலையும் பெறலாம். இவை எல்லாமே கட்டணம் மூலம் அணுகும் சேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
மென்பொருளில் அனுபவமும் இருந்து இளையவர்களுக்கு வழிகாட்டும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் வழிகாட்டியாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த மேடையை பிரிலான்ஸ் மென்பொருள் வல்லுனர்களை அமர்த்திக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மென்பொருள் தொடர்பான பல்வேறு வகை துணை நுட்பங்களின் கீழ் வழிகாட்டுதலையும், வல்லுனர்களையும் அணுகலாம்.
-
’கோட்மெண்டர்’ தளம் வணிக நோக்கிலானது என்றாலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்த தளம், தன்னார்வ நோக்கிலான பகுதியை உருவாக்கியிருந்தது. கோவிட்டுக்கு எதிராக கோடு (Code Against COVID-19) எனும் தலைப்பிலான இந்த பகுதியில் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் உதவி தேவைப்பட்டால், இந்த தளத்தில் பதிவு செய்துள்ள வல்லுனர்கள் நேசக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மென்பொருள் திட்டங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன.
-
நன்றி ஒரு புதிய இணையதளம் ஒன்றை அறிமுக படுத்தியதிற்கு!