சிட்டுக்குருவி இணையதளம்
சிட்டிஜன் ஸ்பாரோ இணையதளத்தை எப்படி அறிமுகம் செய்வது எனத்தெரியவில்லை. சிட்டுக்குருவி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும், குடிமக்கள் அறிவியலுக்கு உதாரணமாக விளங்கும் அருமையான இணையதளம் என குறிப்பிடுவதா? அல்லது, பராமரிப்படாடமல் விடப்பட்ட ஏமாற்றத்தை அளிக்கும் நல்லதொரு இணையதளம் என குறிப்பிடுவதா எனத்தெரியவில்லை.
ஆனால், இந்த தளம் அறிவியல் ஆய்வில் மக்கள் பங்கேற்பிற்கு வழி செய்த இணையதளம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் சிட்டிஜன் சயின்ஸ் எனப்படும் குடிமக்கள் அறிவியலுக்கான உதாரணம் தான்.
சிட்டிஜன் ஸ்பாரோ தளம், அழிந்து வரும் சிட்டுக்குருவியினத்தின் தற்போதைய நிலையை கண்டறிந்து, அவற்றை காக்க தேவையான நடவடக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் 2012 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் முக்கிய அங்கமாக, சிட்டுக்குருவி தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிட்டுக்குருவி என்பது உலகின் எல்லா இடங்களிலும் காணப்படும் பறவையினம். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இவற்றை தோட்டங்களிலும், இல்ல த்திண்ணைகளிலும், ஜன்னல்களிலும் பார்க்கலாம். சிட்டுக்குருவி என்பது பல இந்திய இல்லங்களில் ஒரு உறுப்பினர் போல தான்.
ஆனால், இதெல்லாம் பழங்கதை. சிட்டுக்குருவிகளை பார்ப்பது அரிதாகி கொண்டே வருகிறது. சிட்டுக்குருவி முன் போல ஏன் வருவதில்லை என கேட்க கூட நேரம் இல்லாத வகையில் நவீன வாழ்க்கை பரபரப்பு இருக்கிறது. இருப்பினும் சிட்டுக்குருவிக்கு என்ன ஆனது, அவை எங்கே போயின என்றெல்லாம் அறிவது அறிவியல் நோக்கிலும், சுற்றுச்சூழல் நோக்கிலும் அவசியமாகிறது.
இதற்கான ஆய்வை தனியே விஞ்ஞானிகள் மேற்கொள்வதைவிட, மக்கள் பங்கேற்போடு கூட்டாக மேற்கொண்டால், சிட்டுக்குருவிகள் நிலை குறித்து தெளிவாக அறியலாம். இதன் செயல்வடிவம் தான் சிட்டிஜன் ஸ்பாரோ (http://www.citizensparrow.in/index.php ) இணையதளம்.
சிட்டுக்குருவி ஆய்வில் பங்கேற்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு, சிட்டுக்குருவி தென்படல்களை பதிவு செய்யலாம். அதாவது தங்கள் பகுதியில் சிட்டுக்குருவிகளை காண முடிகிறதா எனும் தகவலை தெரிவிக்கலாம்.
சிட்டுக்குருவி தொடர்பான தகவலை தெரிவிக்கும் போது, வரைபடத்தின் மீதும் அந்த விவரத்தை பதிவு செய்யலாம். மேலும், இதற்கு முன் அந்த இடத்தில் குருவிகளை எந்த அளவு பார்க்க முடிந்தது என தெரிவிக்கலாம்.
இப்படி சேகரிக்கப்படும் விவரங்கள் கொண்டு சிட்டுக்குருவிகள் தொடர்பான விரிவான வரைபடத்தை தயாரிப்பதோடு, குருவிகள் எங்கெல்லாம் அருகியுள்ளன என்றும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் குருவிகள் குறைந்து வருவதற்கான காரணங்களையும் அறிந்து நடவடிக்கை எடுக்கலாம்.
2012 ம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த இணைய ஆய்வு தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி, பொதுமக்கள் மத்தியிலும் நல்ல ஆர்வம் உண்டானது. தொலைபேசி மூலம் சிட்டுக்குருவி தகவலை தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களின் ஒரு அடையாளமான சிட்டுக்குருவிகளை பார்பது அரிதாகி வருவதற்கான காரணங்களை கண்டறியும் இந்த ஆய்வை, பாம்பே இயற்கை அறிவியல் கழகம், உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம், தேசிய பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்டன.
இணையவாசிகள் தங்களை ஆய்வில் பதிவு செய்து கொள்வதற்கான வசதி முகப்பு பக்கத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. சிட்டுக்குருவி பதிவோடு, பயனாளிகள் விரும்பினால் தங்களது சிட்டுக்குருவி அனுபவ கதைகளையும் பகிர வசதி அளிக்கப்பட்டது. பயனாளிகள் பங்கேற்பு அடிப்படையில் அதிகம் பங்களித்தவர்கள் பட்டியலும் இடம்பெற்றிருந்தது.
கூடுதல் பங்களிப்பு செய்ய விரும்புகிறவர்கள், தங்கள் பகுதியில் சிட்டுக்குருவி ஆய்வு நடத்தவும் வழி செய்யப்பட்டிருந்தது. இதற்கான கேள்விகள் பட்டியலும் அளிக்கப்பட்டிருந்தது.
அருமையான முயற்சி தான் சந்தேகமில்லை. ஆனால், பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த தளத்தை பார்க்கும் போது, இந்த தளம் புதுப்பிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் தருகிறது. முதல் பார்வையில், இந்த சிட்டுக்குருவி ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எண்ணம் உண்டாகிறது. ஆனால், 2012 ம் ஆண்டே இந்த திட்டம் முடிந்து, ஆய்வு அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது.
ஆய்வறிக்கை வெளியான பிறகு பத்தாண்டுகளில் என்ன நடந்தது அல்லது, இப்போது என்ன நடக்கிறது என அறிய வழியில்லை. மேலும் இந்த தளத்தை பார்த்து ஊக்கம் பெறுபவர்கள் சிட்டுக்குருவி ஆய்வில் பங்கேற்க விரும்பினால், இந்த தளத்தில் அதற்கான வழியில்லை. பழைய படிவத்தில் பதிவு செய்து கொண்டால் என்னாகும் என்றும் தெரியவில்லை.
நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்த தளத்தில் அதன் தற்போதைய நிலை தொடர்பான ஒரு அறிவிப்பு இடம் பெற்றிருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
ஆய்வு முடிந்திருந்தாலும் கூட, தொடர்ந்து சிட்டுக்குருவி பார்வையிடல் பதிவுகளை மேற்கொள்ள வழி செய்யப்பட்டிருக்கலாம்.
* இந்த தளம் உணர்த்தும் செய்து என்ன என்பதை அறிய… ’இணைய பராமரிப்பு கோட்பாடுகள்’
-