இணையத்தை திரும்பி பார்க்க ஒரு தளம்
காணாமல் போன இணைய பக்கங்களை அல்லது இப்போதைய இணைய பக்கங்களின் பழைய வடிவத்தை கண்டறிவதற்கான எளிய வழியாக சேமிப்பு பக்கம் (https://cachedpage.co/ ) அமைக்கப்பட்டுள்ளது. எளிய வழி என்பதை விட குறுக்கு வழி என்றும் சொல்லலாம். ஏனெனில், இணையத்தை திரும்பி பார்க்க வழி செய்யும் மூன்று முக்கிய சேவைகளை பயன்படுத்தும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இணைய காப்பகம் என சொல்லப்படும், இண்டெர்நெட் ஆர்கேவ் (Internet Archive) 1996 ம் ஆண்டு முதல் பெரும்பாலான இணைய பக்கங்களை சேமித்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது இணையதளங்களை இந்த தளம் பிரதியெடுத்து சேமித்து வருகிறது. கடந்த காலத்தில் ஒரு தளம் எப்படி இருந்தது என அறியும் தேவை ஏற்பட்டால், அதன் அப்போதைய வடிவை இணைய காப்பகத்தில் தேடிப்பார்க்கலாம்.
நேரடியாக இண்டெர்நெட் ஆர்கேவ் தளத்திற்கு சென்று தேடலாம் என்றாலும், இப்படி ஒரு சேவை இருப்பதையே அறியாதவர்களுக்கு வசதியாக, இந்த தளம் வாயிலாக சேமிக்கப்பட்ட இணைய பக்கங்களை தேடும் வகையில், https://cachedpage.co/ தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள தேடல் கட்டத்தில், இணையதள முகவரியை டைப் செய்தால் அதன் முந்தைய வடிவை இணைய காப்பகத்தில் பார்க்கலாம். இதே போன்ற சேவையை கூகுளும் வழங்கி வந்தது.
கூகுள் தேடலில் பலரும் அறியாமல் இருந்த வசதி இது. கூகுளில் தகவல்களை தேடும் போது, தேடல் பட்டியலில் சுட்டிக்காட்டப்படும் எந்த ஒரு தளத்தின் பழைய வடிவையும் நாம் பார்க்கலாம். தேடல் முடிவுக்கு அருகே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், எட்டிப்பார்க்கும் தேடல் விவர பெட்டியில், சேமிப்பு (cached) எனும் பகுதியை கிளிக் செய்தால் இந்த வசதியை அணுகலாம்.
கூகுள் இணையத்தில் உலாவும் போது, சேமித்து வைத்த இணைய பக்கத்தின் நகல் என இதை புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை கூகுள் இணையத்தில் துழாவும் போதும், தேடல் பட்டியலில் சேர்க்கும் தளங்களின் அப்போதைய வடிவை இப்படி சேமித்து வைக்கிறது.
பின்னர் தேவை எனில் இந்த சேமிக்கப்பட்ட பக்கங்களை அணுகலாம். ஆய்வு நோக்கில் துவங்கி, தகவல் சரி பார்ப்பு, காணாமல் போன பக்கங்களை மீண்டும் காண்பது என பலவிதமாக இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இதே போலவே, வெப்சைட் (WebCite) இணையதளமும், பழைய இணைய பக்கங்களை பார்க்க வழி செய்கிறது.
சேமிப்பு பக்க இணையதளம் இந்த மூன்று தளங்களிலும் பழைய பக்கங்களை ஒரு சேர தேட வழி செய்கிறது. அதாவது, இந்த மூன்று சேவைகளிலும் தேடுவதற்கான எளிய இடைமுகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்று சேவைகள் தொடர்பான சுருக்கமான அறிமுகத்தோடு, இணையத்தின் சேமிக்கப்பட்ட பக்கங்களை பார்க்கும் வசதி தொடர்பான அறிமுக குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
மிக எளிமையான புத்திசாலித்தனமான ஆனால் பயனுள்ள இணையதளம்.
பி.கு: கூகுளில் சேமிப்பு பக்கங்களை பார்க்கும் வசதி இனியும் சாத்தியம் இல்லை. கூகுள் இந்த சேவையை நிறுத்திக்கொண்டு விட்டது. ஆனால், இந்த தளத்தில் அதற்கான குறிப்பு இல்லை. இது ஒரு குறைபாடு. இந்த தளத்தை உருவாக்கிய புத்திசாலி, இந்த தகவலை அப்டேட் செய்திருக்கலாம்.
மேலும், கூகுளின் போட்டி தேடியந்திரமான மைக்ரோசாட்ப் பிங்கில் இன்னமும் சேமிப்பு பக்கத்தை பார்க்கும் வசதி இருக்கிறது. அதையும் இதில் சேர்த்திருக்கலாம்.