உங்கள் இணைய கூட்டங்கள் ஒளிரட்டும்!
இணைய வழி கூட்டங்களை நடத்த ஜூம் போதுமானது என்றாலும், மாற்று சேவை நாடுபவர்கள் குளோ (https://gloww.com/) சேவையை பரிசீலிக்கலாம். அதிலும் குறிப்பாக, வர்த்தக நிறுவனங்கள் சார்பில் தொழில்முறை நோக்கிலான இணைய கூட்டங்களை நடத்துபவர்கள் இந்த சேவையை அறிமுகம் செய்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இணைய கூட்டங்களில் ஆர்வம் இல்லாவிட்டாலும், புதுமையான இணைய சேவைகளை அறிமுகம் செய்து கொள்ள நினைப்பவர்களையும் இந்த சேவை கவர்ந்திழுக்கும்.
குளோ சேவையில் அப்படி என்ன இருக்கிறது என்றால், தரமான் வீடியோ சந்திப்பு வசதியை, கூட்டங்களுக்கான அழகிய வடிவமைப்பு மற்றும் பங்கேற்பாளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய அம்சங்களோடு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூம் அல்லது கூகுள் மீட் போலவே, குளோவிலும் பயனாளிகள் தங்களுக்கான இணைய கூட்டங்களை எளிதாக ஏற்பாடு செய்து மற்றவர்களை அழைக்கலாம். அணிகளுக்கான சிறிய சந்திப்பு முதல், பெரிய வர்த்தக கூட்டங்கள் வரை பலவகையான இணைய நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
அனைத்து ஊழியர்களும் பங்கேற்கும் கூட்டம், ஊழியர் பயிற்சி, பயிலறங்குகள், ஆலோசனை கூட்டம் போன்றவற்றுக்கும் இந்த சேவை ஏற்றது.
மொபைல் உள்ளிட்ட சாதனங்களில் இருந்தும் அணுகலாம் என்பதோடு, பங்கேற்பாளர்களோடு நிகழ்நேர உரையாடலிலும் ஈடுபடலாம். இணைய அரட்டை தவிர, விளையாட்டுகள், ஆன்லைன் வாக்குப்பதிவு என பலவிதங்களில் பங்கேற்பாளர்களோடு தொடர்பு கொள்ளும் வசதி இருக்கிறது.
கூட்டங்களை ஒளிப்பதிவு செய்து பங்கேற்பாளர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதோடு நிகழ்வுகளின் சுருக்கங்களையும் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இலவச சேவை மற்றும் கட்டண சேவை இருக்கிறது.
இந்த சேவையின் தனித்தன்மை, கூட்டங்களுக்கான பலவித வடிவமைப்புகளை வழங்குவது தான். தன்மைக்கேற்ப, கூட்ட வடிவமைப்பை தேர்வு செய்து கொண்டால், பின்னணி அதற்கேற்ப அமைகிறது. அதோடு, அதற்கேற்ற அரங்க அம்சங்களும் திரையில் தோன்றுகின்றன. காட்சிவிளக்க கூட்டம் என்றால் அதற்கேற்ற வடிவமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம். பேச்சாளர்கள், விருந்தினர்களை அறிமுகம் செய்யும் வசதி கொண்ட வடிவமைப்புகளும் இருக்கின்றன.
குளோவை முயன்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
-