நையாண்டி செய்திகளை உருவாக்கும் தளம்.
தி பாக்ஸி சிறந்த செய்தி தளமா என்பது அதை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை பொருத்தது. ஆனால், நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளங்களின் பட்டியலில் தி பாக்ஸி (https://thefauxy.com/) இருக்க வேண்டும்.
பாக்ஸி, பாரம்பரிய செய்தி தளமும் அல்ல, வழக்கமான செய்தி தளமும் அல்ல: மாறாக, செய்திகளை கேலியும் கிண்டலும் கலந்து, இல்லாத செய்திகளை உண்மை செய்திகள் போலவே அளிக்கும் நையாண்டி செய்தி தளம். அதன் செய்திகள் சில நேரங்களில் சிந்திக்க வைப்பதாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, அண்மை செய்தி ஒன்று, இந்தியா நான்காவது பொருளாதாரமாக உருவானதை அடுத்து தனது சம்பளம் உயரும் எனும் நம்பிக்கையில் உத்தரபிரதேச மனிதர் ஒருவர் தன் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவு செய்து, மோடி கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கிறது.
இதன் செய்திகள், பல நேரங்களில் நையாண்டியின் நோக்கத்தை மீறியதாக இருப்பதாகவும் உணரலாம்.
நையாண்டி செய்திகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அமெரிக்காவின் தி ஆனியன் (https://theonion.com/) தளத்திற்கான இந்திய பதில் என வர்ணிக்கப்படும் தி பாக்ஸி, பொய் செய்தி யுகத்தில் கவனிக்க வேண்டிய செய்தி தளம்.
கடந்த காலங்களில் பாக்ஸி வெளியிட்ட பல நையாண்டி செய்திகள் உண்மை என கருதப்பட்டு சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன. சில செய்திகளை முன்னணி மற்றும் சர்வதேச ஊடகங்களும் கூட உண்மை என நம்பி வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்திய பணவீக்கம் தொடர்பாக தெரிவித்ததாக ஒரு கருத்தை வெளியிட்டு இந்த தளம் வெளியிட்ட நையாண்டி செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், நையாண்டி செய்தி எனும் நோக்கில் பொய் செய்தி என தகவல் சரி பார்ப்பு தளமான பூம் லைவ் (https://www.boomlive.in/) இந்த செய்தி பற்றி கட்டுரை வெளியிட்டது.
விக்கிபீடியா மீது வழக்கு தொடர்ந்துள்ள ஏஎன்.ஐ செய்தி நிறுவனம், 3 நேனோ நொடி படத்திற்காக தன் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அந்த வழக்கை சந்திக்க வாசகர்களிடம் இருந்து 500 கோடி திரட்டி அந்த நிறுவனத்தையே வாங்க இருப்பதாகவும் வெளியிட்டுள்ள செய்தியை நையாண்டி சிறு காவியம் எனலாம்.
மற்றபடி இந்த நையாண்டி தளத்தின் தரத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒன்று, பொய் செய்திகள் மெய் செய்திகள் போலவே பகிரப்படுவது பரவலாக உள்ள காலகட்டத்தில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய செய்தி தளம்.
-
பி.கு: இதழாளர்களும், செய்தியில் ஆர்வம் உள்ளவர்களும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களை விரிவாக அறிமுகம் செய்யும், இணைய செய்தி கையேடு தளத்தை அறிய இங்கே அணுகவும்.
இணைய செய்தி கையேடு 100 தளங்களை விரிவாக அறிமுகம் செய்கிறது. இந்த கையேட்டுடன் அறிந்திருக்க வேண்டிய கூடுதல் செய்தி தளங்களில் ஒன்றாக தி பாக்ஸி அமைகிறது.
-