உங்களுக்கான ஏஐ சேவகன்
ஏஐ சேவைகளை பொருத்தவரை அவற்றின் மிகைத்தன்மையை அகற்றி விட்டு, ஆதார பயன்பாடு என்ன என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஆனால் இப்போது நாம் பார்க்க இருக்கும் ஏஐ சேவையை புரிந்து கொள்ள, சற்றே உயர்வு நவிர்ச்சி வர்ணனைகளை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்.
எதிர்காலத்தில் டபிள்.சோ (https://dubble.so/ ) சேவை இல்லாமல் அலுவலக பணி செய்ய முடியாது எனும் உணர்வை ஊழியர்கள் பெறலாம். வேர்டு போல, வெப்கேம் போல, டேபிள்.சோ சேவையும் தவிர்க்க இயலாத சேவையாக மாறலாம்.
அதோடு, இந்த சேவை பயன்படுத்தும் போது, ஏதோ தங்களுக்கான தனிப்பட்ட உதவியாளர் அருகாமையில் நின்று கொண்டு தேவையான குறிப்புகளை சேமித்து வைப்பது போன்ற உணர்வையும் பெறலாம். ஆனால், இந்த உதவியாளர் கண்ணுக்குத்தெரியாத ஏஐ சார்ந்த சேவை என்பதோடு, தனியே சம்பளமும் தேவையில்லாது.
இந்த வர்ணனையின் மிகைத்தன்மையை மீறி, டபிள்.சோ சேவையை நீங்கள் பயனுள்ளதாக உணரலாம். ஆனால், சில வரம்புகளுடன் இதை அணுக வேண்டும். முதலில் அலுவலகம் என்றால் எல்லா அலுவகங்களும் இல்லை. பெரும்பாலும், கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் அலுவலகங்கள் என்று கொள்ளலாம். அதே போல ஊழியர்கள் என்றால், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஊழியர்கள்.
கம்ப்யூட்டரை கையாளும் ஊழியர்களிலும், அவர்கள் செய்யும் குறிப்பிட்ட தன்மை கொண்ட பணிகளை தான் இந்த ஏஐ சேவை கவனித்து குறிப்பெடுத்து தருகிறது.
அதிலும் குறிப்பாக, செய்யும் வேலைகளை ஆவணப்படுத்த வேண்டிய பணிகளுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். ஆவணப்படுத்தல் என்பதை, படிப்படியாக குறிப்பெடுப்பது என இங்கு புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, எக்ஸெல் கோப்பை கொண்டு, ஒரு அட்டவனையை உருவாக்கினீர்கள் என்றால், அதை எப்படி எல்லாம் செய்தீர்கள் என இந்த சேவை குறிப்பெடுத்து தரும். தேவையான ஸ்கிரீன்ஷாட்களுடன். இதை கொண்டு, விளக்க காணொலி அல்லது விரிவான வழிகாட்டுதல் கட்டுரையை உருவாக்கி கொள்ளலாம்.
இப்போது டபிள் சேவை என்ன செய்கிறது என புரிந்திருக்குமே. அடிப்படையில் இந்த சேவை ஸ்கீரின்ரெகார்டிங் என சொல்லப்படும் திரை பிடிப்பு மூலம் செயல்படுகிறது. குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக இதை தரவிறக்கம் செய்து, எப்போது தேவையோ அப்போது செயலுக்கு அழைத்தால் இயங்கத்துவங்குகிறது.
பயனாளிகள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளையும், பதிவு செய்து கொண்டு, ( ரெகார்டு பட்டனை அழுத்த வேண்டும்), அதன் பிறகு, அதில் உள்ள செயல்களை அப்படியே படிப்படியாக பிரதியெடுத்து தருகிறது.
ஆக, உங்கள் செயல்பாடுகளை நீங்களே ஸ்கிரீன்ரெகார்டு செய்து, அவற்றுக்கு விளக்கம் அளிப்பதற்கு பதில், இந்த சேவை நீங்கள் செய்வதை கவனித்து, பதிவு செய்து, அதற்கான விளக்கத்தை அளிக்கிறது.
விளக்க காணொலி மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளுக்கு இந்த முறை உதவும். அதே போல, புதிய பயனாளிகளை வரவேற்பது எப்படி எனும் செயல்முறையை சக ஊழியர்களுக்கு விளக்க உதவும். அவருக்கு என தனியே செய்முறை விளக்கம் அளிக்க வேண்டாம். நீங்கள் செய்யும் போதே டபிள் கொண்டு பதிவு செய்து அலுவலக உறுப்பினர்களுக்காக பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு அணியாக செயல்படும் சூழல்களில் விவாதங்கள், வழிகாட்டுதலுக்கு இது கைகொடுக்கும். மேலும் பலவிதங்களில் பயன்படுத்தலாம். இணையத்தில் நீங்கள் விஜயம் செய்யும் தளங்களை எல்லாம் பதிவு செய்து சென்று பார்க்கலாம்.
இலவச மற்றும் கட்டணச்சேவை உள்ளது.
நீங்கள் பணியாற்றுவதை நாங்கள் ஆவணப்படுத்தல் செய்கிறோம் என இந்த சேவை தன்னை வர்ணித்துக்கொள்கிறது. ஆவணப்படுத்தல் என்பது பதிவு செய்து குறிப்பெடுப்பது என புரிந்து கொண்டால் போதுமானது. மற்றபடி, நிரல்களை அடிக்கும் போது, அதை ஆவணமாக்குவதை எல்லாம் நீங்கள் தான் செய்தாக வேண்டும்.
ஏஐ சேவை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது அழகான உதாரணம். ஏற்கனவே உள்ள ஸ்கிரீன்ரெகார்டு வசதியோடு, ஏஐ நுட்பத்தின் திறனை இணைத்து, பயனுள்ள பதிவு சேவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
டபிள் சேவையை இன்னொரு விதத்திலும் பாராட்டலாம். இதன் வலைப்பதிவு பக்கத்தில் இதே போன்ற போட்டி சேவைகளையும் குறிப்பிட்டு அவற்றுடன் ஒப்பீடும் அளிக்கப்பட்டுள்ளது.
· தனிப்பட்ட முறையில், இணைய நடவடிக்கைகளை திரைப்பிடிக்க இந்த சேவையை பயன்படுத்த விரும்புவேன் என நினைக்கிறேன்.
-
ஏஐ அடிப்படைகள், வரலாற்றை அறிய உதவும் புத்தகம்