கம்ப்யூட்டர் கண்கள் புத்தகம்
அச்சு புத்தகத்தின் மின்னூல் வடிவம் போல, வலை வடிவமும் இருக்கிறது. மின்னூல் போல வலை நூல்கள் அதிகம் இல்லை, சொற்பமாகவே இருக்கின்றன. வலை நூல் அல்லது வலை புத்தகம் என்றால், புத்தகத்தை இணையதளம் வடிவில் வாசிக்க வழி செய்வது.
ஆனால் புத்தகத்திற்கான இணையதளத்தை உருவாக்குவது என்பது வேறு, புத்தகத்தையே இணையதள வடிவில் வழங்குவது என்பது வேறு. இதற்கான சிறந்த உதாரணமாக, ’பவுண்டேஷன்ஸ் ஆப் கம்ப்யூட்டர் விஷன்’ (Foundations of Computer Vision ) வலை புத்தகத்தை குறிப்பிடலாம்.
எம்.ஐ.டி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் அதன் இணையதள வடிவில் எளிதாக படிக்கும் வகையில் அமைந்துள்ளது. முகப்பு பக்கத்தில் புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. முன்னுரை மற்றும் புத்தக அமைப்பு பற்றிய தகவல்கள் அதற்கு கீழே இடம்பெற்றுள்ளன.
இடப்பக்கம் புத்தகத்தின் உள்ளடக்கம் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளது. அத்தியாயத்தின் தலைப்புகள், துணைத்தலைப்புகள் என விரியும் இந்த பட்டியலை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதியாக எச்டிஎம்.எல் வடிவில் படிக்கலாம்.
எளிய வடிவமைப்போடு, சிக்கல் இல்லாமல் படிக்கும் வகையில் இடைமுகம் அமைந்துள்ளது.
கம்ப்யூட்டர்கள் எப்படி பார்க்கின்றன என்பதை விரிவாக விளக்கும் இந்த புத்தகத்தை வலை வடிவில் படிக்க வாய்ப்பு கிடைப்பதை பெரும் வரப்பிராசதம் என்றே சொல்ல வேண்டும். கம்ப்யூட்டர் பார்வை என்பது ஏஐ நுட்பத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் ஏஐ நுட்பத்தில் ஆர்வம் கொண்ட எவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
வலை புத்தகத்தை வாசிக்க: https://visionbook.mit.edu/