இது ஏஐ தேடியந்திரங்களின் காலம். சாட்ஜிபிடி போன்ற ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் சிறந்த கேள்வி பதில் இயந்திரங்களாக செயல்பட்டு கூகுள் போன்ற பொது தேடியந்திரங்களில் தேடுவதற்கான அவசியத்தையே இல்லாமல் செய்துவிடலாம் என பேசப்படுகிறது.
சாட்ஜிபிடி, கூகுளுக்கு சவாலாக விளங்குமா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஏஐ திறன் மூலம் தேடல் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் தேடியந்திரங்கள் அடுத்தடுத்து அறிமுகம் ஆகி கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில், ஐஆஸ்க்.ஏஐ (https://iask.ai/ ) வருகிறது.
கூகுள் போல அல்லாமல் இந்த தேடியந்திரத்தில் நேரடியாக கேள்வி கேட்டு தேடலாம். தேடலில் கேட்கப்படும் கேள்வியை புரிந்து கொண்டு, அதற்கேற்ற பதிலை அழகாக சுருக்கமாக அளிக்கிறது. ஆக, கூகுளில் தேடுவது போல, வரிசையாக முன்னிறுத்தப்படும் இணைய முடிவுகளின் பட்டியலில் நமக்கான பதிலை தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.
அது மட்டும் அல்ல, கேள்விக்கான பதில் சுருக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த முதல் மூன்று தேடல் முடிவுகளை ஆதாரமாக பட்டியலிடவும் செய்கிறது. மேலதிக தகவல்கள் அல்லது தகவல் உறுதிக்கு இந்த பட்டியலை பார்த்துக்கொள்ளலாம்.
தீர்மானமான பதில் கொண்ட கேள்விகளுக்கு இந்த தேடியந்திரம் அளிக்கும் பதில்கள் நிச்சயம் பயனாளிகள் தேடல் நேரத்தை மிச்சமாக்கும்.
தேடலை பட்டைத்தீட்டிக்கொள்வதற்காக, கல்வியில் தகவல்களை மட்டும் தேடவும், இணைய குழுக்களில் தேடவும், புத்தகங்களில் தேடவும் என தேடலை வடிகட்டும் வாய்ப்பும் இருக்கிறது.
சாட்ஜிபிடி போன்ற நுட்பத்தை பயன்படுத்துவதாக இந்த தேடியந்திரத்தின் அறிமுக பக்கம் தெரிவிக்கிறது. ஆனால் சாட்ஜிபிடியை விட இயற்கை மொழி செயலாக்கத்தில் மேம்பட்ட நுட்பமாக இது அமைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேடியந்திர போக்கு மாறிக்கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம் இந்த புதிய ஏஐ தேடியந்திரம். நீங்களும் பயன்படுத்திப்பார்த்து கருத்துகளை பகிருங்கள்.
-
கேள்வி பதில் சார்ந்த தேடியந்திரம் எனும் போது, ஆஸ்க் ஜீவ்ஸை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
*
ஏஐ தேடியந்திரங்கள் காலத்தில் கவனம் பெறும் பிரேவ் தேடியந்திரத்தின் அடுத்த கட்டம்.
நன்றி நண்பரே!
Thanks a lot