செல்பியும்,இணைய விளம்பரமும்
வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பரவலான கவனத்தை ஈர்த்து பல்வேறு தளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இந்த படத்தின் அம்சங்கள் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. எனினும், இந்த பதிவு விடுதலை திரைப்படம் தொடர்பானது அல்ல. மாறாக, ஹாலிவுட் திரைப்படம் சார்ந்த இணையதளம் தொடர்பானது.
விரைவில் வெளியாக இருக்கும் பார்பி படத்திற்காக ’பார்பி செல்பி ஜெனரேட்டர்’ எனும் இந்த தளம் (https://www.barbieselfie.ai/ ) அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பரபரப்பாப பேசப்பட்டு வரும் ஏஐ நுட்பத்தையும், ரசிகர்களின் செல்பி ஆர்வத்தையும் பயன்படுத்திக்கொண்டு விளம்பர நோக்கில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பார்பி ஆர்வலர்கள் இந்த தளத்தில் தங்கள் படத்தை சமர்பித்து பார்பி போல செல்பியாக உருமாற்றிக்கொள்ளலாம். இந்த தளம் மூலமே செல்பியும் எடுத்துக்கொள்ளலாம். இந்த செல்பியை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
மிகவும் பயனுள்ள தளம் என்றோ, வியக்க வைக்கும் புதுமையான தளம் என்றோ சொல்ல முடியாது என்றாலும், திரைப்பட விளம்பரத்திற்காக இணையதள வசதியை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கான அழகான உதாரணம். சொல்லப்போனால், ஹாலிவுட்டில் இணையம் பிரபலமாகத்துவங்கிய காலத்தில் இருந்தே விளம்பர நோக்கிலான இணையதளங்களை அழகாக பயன்படுத்தி வருகின்றனர். நம்மூரில் தான், இணையதளம் என்பது பழைய உத்தியாகிவிட்டது என சமூக ஊடக உரையாடலை மட்டுமே சார்ந்திருக்கின்றனர்.
நிற்க, வெற்றிமாறன் குழுவினர் யோசித்திருந்தால், விடுதலை படத்தின் மையக்கரு சார்ந்த அழகான இணையதளத்தை அமைத்திருக்கலாம். அல்லது அந்த படத்தை விமர்சிப்பவர்கள், சோளகர் தொட்டி நாவலுக்காக ஒரு இணையதளம் அமைக்கலாம்.