எல்லாவற்றுக்குமான ஐஎம்டிபி
ஐஎம்டிபி போன்ற தகவல் களஞ்சியம் ஒவ்வொரு துறைக்கும் தேவை. புத்தகங்களை பொருத்தவரை குட்ரீட்ஸ் (Goodreads ) வகையில் வருகிறது. இசைத்துறைக்கு என இதே போன்ற தளங்களும் இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து ஒரு இணையதளமாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு எண்ணம் அல்லது நோக்கத்தில் தான், ரேட்.ஹவுஸ் (https://rate.house/ ) இணையதளம் துவக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஐஎம்டிபி அல்லது குட்ரீட்ஸ் போன்ற களஞ்சியம், ஆனால் மேலும் பல ஊடக வகைகளுக்கானது என இந்த தளம் தன்னை வர்ணித்துக்கொள்கிறது. அதாவது, ஐஎம்டிபி அல்லது குட்ரீட்ஸ் போலவே இந்த தளம், திரைப்படங்கள், இசை, புத்தகங்கள், தொலைக்காட்சி, கேம்கள், பாட்காஸ்டிங் ஆகியவற்றுக்கான களஞ்சியமாக அமைந்துள்ளது.
ஐஎம்டிபியில், திரைப்படங்கள் தொடர்பான தகவல் அளிப்பதோடு, ரேட்டிங் செய்யலாம் என்பது போல இந்த தளத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடக வகைகளுக்கான தகவல்களை காணலாம் மற்றும் ரேட்டிங் செய்யலாம்.
விக்கிபீடியா போன்ற பங்கேற்பு தன்மை கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் தகவல்களை சேர்க்கலாம். ஏற்கனவே உள்ள தகவல்களுக்கு கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் சமூக ஊடக அம்சமும் கொண்டுள்ளது.
திரைப்படம் முதல் பாட்காஸ்டிங் வரை பல வகை ஊடகங்கள் தொடர்பான தகவல்களை அணுகலாம் என்பது ஈர்ப்புடையதாக தான் இருக்கிறது. ஆனால், ஐஎம்டிபி போன்ற தோற்றத்தை மீறி, உள்ளட்டக்கம் மேலோட்டமாகவே இருக்கிறது. உறுப்பினர்கள் பங்கேற்பும் போதுமான அளவு இல்லை.
ஐஎம்டிபி + குட்ரீட்ஸ் போல ஒரு தளத்தை அமைத்து, ஒவ்வொரு ஊடக வகைக்குமான மேலோட்டமான தகவல்களை இடம் பெற வைத்தால், உறுப்பினர்கள் வந்து குவிந்துவிடுவார்கள் என நினைத்திருக்கலாம். ஆனால், ஐஎம்டிபி போன்ற தளத்தை வளர்த்தெடுப்பது என்பது என்றால் என்ன என்பதை புரிய வைப்பதாகவே இந்த தளம் அமைகிறது. தளத்தின் பின்னணியில் உள்ள நிறுவனம் அல்லது நிறுவனர் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருப்பது இதன் நோக்கத்தை அறிய உதவவில்லை.
-
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பது போல, எழுத்து வடிவிலான பதிவுகளை, ஏ.ஐ., வீடியோவாக மாற்றித்தரும் சேவைகள் பிரபலமாக இருக்கின்றன என்றால், இப்போது ஏ.ஐ உதவியுடன், வீடியோக்களை வலைபதிவாக மாற்றித்தரும் சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது: https://www.towords.io/