’மீம்’களில் உயிர்பெறும் தாஸ்தயேவஸ்கி
ரஷ்யா என்றதும் காபல்நிகோவ் (ஏகே 47 துப்பாக்கிகள் ) பலருக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் தாஸ்தயேவஸ்கியை அறிந்த டிஜிட்டல் தலைமுறைக்கு ரஷ்யா என்றதும் நினைவுக்கு வருவது ராஸ்கோல்நிகோவ் தான்.
ராஸ்கோல்நிகோவ் பெயரை பார்த்ததுமே, தாஸ்தயேவஸ்கியின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நினைவுக்கு வரும். அப்படியே, இந்த நாவலுக்கும், வாசிப்பு அனுபவத்தில் இருந்து பொதுவாக விலகியிருப்பதாக சொல்லப்படும் டிஜிட்டல் தலைமுறைக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகமும் வரலாம்.
விஷயம் என்னவென்றால், தாஸ்தயேவஸ்கியும், அவரது அழியா ஆக்கங்களும் டிஜிட்டல் தலைமுறையினருக்கும் பிடித்தமானதாக இருக்கின்றன என்பதும், அதை அவர்கள் தங்கள் பாணியில் மீம்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் தான். இலக்கிய ஆர்வலர்களையும், விமர்சகர்களையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த போக்கின் உதாரணம் தான் ராஸ்கோல்நிகோவ் தொடர்பான இந்த மீம்.
’சிகிச்சை செலவு மிக்கது, ஆனால் ராஸ்கோல்நிகோவ் போல உணர்வது இலவசமானது” .
மேலே சொன்ன இந்த மீம் வாசகத்தை படிக்கும் போது, புதுமைபித்தனின் துன்பகேணி கதை தலைப்பு நினைவுக்கு வரலாம். துன்பக்கேணி போன்ற வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் இருந்தும், துயரங்களில் இருந்தும் மீட்கப்படுவதற்கான வழியாக ராஸ்கோல்நிகோவின் அனுபவங்கள் இருப்பதை தாஸ்தயேவஸ்கியை வாசித்தவர்கள் உணரலாம்.
இந்த மீம் தாஸ்தயேவஸ்கியின் கதை நாயகனின் அக உலகம் மற்றும் அதை அவர் அற்புதமாக விவரிக்கும் தன்மை சார்ந்தது என்றால், கரம்சோவ் சகோதரர்கள் (The Brothers Karamazov) உள்ளிட்ட நாவல்கள் சார்ந்த மீம்களும் உலா வருகின்றன. இதே போலவே நோட்ஸ் பிரம் அண்டர்கிரவுண்ட் மற்றும் இடியட் உள்ளிட்ட நாவல்கள் தொடர்பான மீம்களும் உலா வருகின்றன.
ஆனால் ஒன்று, தாஸ்தயேவஸ்கி ஆக்கங்கள் தொடர்பான மீம்களை ரசிக்க வேண்டும் எனில் கொஞ்சமேனும் தாஸ்தயேவஸ்கியை படித்திருக்க வேண்டும். ஏனெனில், பெரும்பாலான மீம்கள் தாஸ்தயவேஸ்கியின் நாவல்களில் வரும் பாத்திரங்கள், அதன் கதை அமைப்பு, பாத்திரங்களின் அக உலக சிக்கல்கள் உள்ளிட்டவை சார்ந்தவையாக இருப்பது தான்.
மீம்கள் தொடர்பான பொது பார்வையை மாற்றக்கூடியவையாக தாஸ்தயேவஸ்கி மீம்கள் இருப்பதை இன்னும் வியப்பை அளிக்கலாம். இந்த வியப்பில் மூழ்க வேண்டும் எனில், தாஸ்தயேவஸ்கி ஆர் டஸண்ட்ஷீ (https://www.dostoevskyordoesntshe.com/ ) இணையதளத்திற்கு செல்லவும்.
இந்த தளத்தின் உரிமையாளர் தாஸ்தயேவஸ்கி மீம்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் மற்றும் டம்பளர் வலைப்பதிவு பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அதோடு, தாஸ்தயேவஸ்கி ரசிகர்களுக்காக டிஸ்கார்டு விவாத குழுவையும் ஏற்படுத்தி இருக்கிறார்.