இன்னொரு ஏ.ஐ உருவாக்க இணையதளம்.
பயனாளிகள் தங்கள் புகைப்படத்தை சமர்பித்தால், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அந்த படத்தை பலவிதமான விளைவுகளுடன் மாற்றித்தரும் ஏ.ஐ உருவாக்க சேவை தளங்கள் பல இருக்கின்றன. இந்த வரிசையில் சற்று மாறுபட்டதாக ரிப்ளக்ட்மீ (https://reflectme.art/#tp ) அமைகிறது.
இந்த தளத்தில் சமர்பிக்கப்படும் புகைப்படத்தை, ஏஐ நுட்பம், அனிமி பாத்திரம், விண்வெளி வீரர், டாக்டர், விஞ்ஞானி என பலவித டிஜிட்டல் தோற்றங்களில் மாற்றித்தருகிறது. எந்த வகை தோற்றம் தேவை என தேர்வு செய்து கொள்ளலாம்.
ஏ.ஐ உருவாக்க தளங்கள் பல அளிக்கும் வசதி என்றாலும், இவை எல்லாமே தானியங்கி முறையில் செயல்படுகின்றன. இதற்கு மாறாக இந்த தளம் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தோற்றங்களை மூல படத்துடன் சரி பார்த்து மிகவும் பொருத்தமான தோற்றத்தை இமெயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறுகிறது. இதற்கென கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான தளம் என்றாலும், ஏதோ ஒரு தளத்தில் புகைப்படத்தை சமர்பிப்பது தனியுரிமை கவலைகளை உண்டாக்கலாம். அதிலும் இந்த தளம் குறைந்தது பத்து புகைப்படம் தேவை என்கிறது. ஆனால், புகைப்படங்கள் சேமிக்கப்படாமல் உடனே அழிக்கப்படுவதாக சொல்கிறது.
இந்த தளம் என்றில்லை, இணையத்தில் தகவல் அறுவடை முழு வீச்சில் நடைபெறும் சூழலில், டிஜிட்டல் தோற்றங்களுக்காக பயனாளிகள் தங்கள் புகைப்படங்களை மறுயோசனை இல்லாமல் பதிவேற்றும் பழக்கம் கொண்டிருப்பது யோசிக்க வைக்கிறது.
-