ஏஐ கால இணைய அகராதி
மொழிபெயர்க்க முடியாத சொற்கள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இதே பொருளை குறிக்கும் பெயரில் அண்டிரான்ஸ்லேடபில்.கோ (https://untranslatable.co/ ) ஒரு புதிய இணைய அகராதி அறிமுகம் ஆகியுள்ளது.
எத்தனையோ இணைய அகராதிகள் இருந்தாலும், அண்டிரான்ஸ்லேடபில்.கோ அகராதியை மாறுபட்ட இணைய அகராதி என வர்ணிக்கலாம். ஒன்று இது பன்மொழி அகராதி. இன்னொன்று இது பயனாளிகள் பங்களிப்பால் உருவாகும் அகராதி.
அர்பன் டிக்ஷனரி, விக்கிஷனரி போன்ற இணைய அகராதிகள் பயனாளிகள் பங்கேற்பால் உருவானவை என்றாலும், அவற்றில் இருந்தும் கூட அண்டிரான்ஸ்லேடபில்.கோ வேறுபட்டது. எப்படி எனில், இந்த அகராதி சொற்களுக்கு மொழிபெயர்ப்பை கடந்து நிற்கும் பொருளை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது, வழக்கமான அகராதிகள் போல, சொற்களுக்கான பொருளை மட்டும் அளிக்காமல், அந்த சொற்கள் மக்கள் மத்தியில் எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது, என்னவிதமாக பொருள் கொள்ளப்படுகிறது என்பதை இந்த அகராதியில் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் பேச்சு வழக்கிலான சொற்களுக்கும், வாக்கியங்களுக்கும் பயனாளிகள் பொருள் அளிக்கும் அர்பன் டிக்ஷனரி போலவே இந்த அகராதி அமைந்திருந்தாலும், உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் இதே போல பொருள் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அர்பன் டிக்ஷனரி அதனளவில் முன்னோடி இணைய அகராதி என்றாலும் கூட அதன் நம்பகத்தன்மையில் சிக்கல் இருக்கிறது. அர்பன் டிக்ஷனரியில் அளிக்கப்படும் பொருளில், கேலி, கிண்டல் கலந்திருக்கலாம். இவற்றை பிரித்தறிவது கடினம்.
அண்டிரான்ஸ்லேடபில்.கோ இவ்வாறு அல்லாமல், பிற மொழி சொற்கள், சொல் வழக்குகள், வாக்கியங்களுக்கு அந்த மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் பொருளை அளிக்கிறது. அந்த அந்த மொழி பேசும் பயனாளிகளே இதை செய்கின்றனர்.
இந்த அகராதியில் யார் வேண்டுமானாலும் சொற்கள்- சொல் வழக்குகளுக்கான பொருள் அளிக்கலாம். ஆனால், அதற்கான ஆதாரங்கள் மற்றும் பயன்பாடு உதாரணங்களை அளிக்க வேண்டும். இந்த முறையில் சொற்களுக்கான அகராதி கடந்த பொருளை அறிவதோடு, அதன் நம்பகத்தன்மையையும் உறுதி செய்து கொள்ளலாம். சொற்களுக்கான விளக்கத்துடன் அதன் பயன்பாட்டிற்கான உதாரணங்களை படிக்க முடிவதோடு, தொடர்புடைய இணைய இணைப்பு அல்லது யூடியூப் இணைப்பை அணுகலாம்.
இதில் சொற்களை சமர்பிக்க விரிவான நெறிமுறையுடன் கூடிய விண்ணப்ப வடிவம் இருக்கிறது. இடம்பெற்றுள்ள சொற்களை வாசிப்பதும் புதிய அனுபவமாக இருக்கிறது.
பயனாளிகள் தங்களுக்கு ஆர்வம் உள்ள மொழிகளில் இடம்பெற்றுள்ள சொற்களுக்கான விளக்கங்களை நாடலாம் அல்லது ஏதேனும் ஒரு விளக்கத்தை படித்துப்பார்த்து அந்த மொழி சொற்களின் பொருளை அறியலாம்.
இந்த அகராடதியின் அம்சங்கள், சொற்களுக்கான புள்ளி விவரங்கள், கேள்விகள் ஆகிய பகுதிகளோடு, இதே போன்ற பிற இணைய அகராதிகள் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
மேலும், அகராதிக்கான அறிமுக பக்கத்தில் அதன் நோக்கம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அந்த அந்த மொழி பேசுபவர்கள் பார்வையில் பிற மொழிகளை அறிந்து கொள்ள வழி செய்வதே இதன் முதன்மையான நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சொல்லின் பொருளை மட்டும் அளிக்காமல், அது யாரால், எவ்விதம், எந்த விதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த அகராதி விளக்க முற்படுகிறது.
அதே நேரத்தில் பாரம்பரிய அகராதிகளுக்கு மாற்று அல்ல, துணை செய்யும் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு என்பது சிக்கலான விஷயம், ஒரு எளிய சொல் கூட மொழி பெயர்ப்பில் வேறு பொருள் அளிக்கலாம் என்பதால், அந்த மொழி பேசுபவர்கள் சொற்களை பயன்படுத்தும் விதத்தை அறிவது முக்கியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, புல்லின் நிறம் பச்சை என்பது ஜப்பானிய மொழியில் புல்லின் நிறம் நீலம் என்றாகுமாம். ஏனெனில் ஜப்பானில் புற்கள் நீல நிறமானதாக கருதப்படுகிறது.
எந்த சொல்லையும் குறிப்பிட்ட அளவு தான் மொழிபெயர்க்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு கொண்டு எல்லா மொழிகளிலும் உள்ள சொற்களை, பிரதிகளை மொழிபெயர்க்கும் வசதி பிரபலமாகி வரும் நிலையில், மொழிபெயர்ப்பில் தவறும் பொருள் அளிக்கும் இந்த பயனாளிகள் பங்கேற்பு அகராதி முக்கிய முயற்சி.
இணைய அகராதி முகவரி: https://untranslatable.co/pages/explore
-