எழுதுவதை விட நன்றாக பேச வரும் என நினைப்பவர்கள் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ஏஐ சார்ந்த இணைய சேவையான ஆடியோ பென் (https://audiopen.ai/) இணையதளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் இந்த தளம் பயனாளிகள் பேசுவதை அப்படியே எழுத்து வடிவில் உருவாக்கித்தரும் சேவையாக அமைகிறது.
இந்த தளத்தில் உள்ள மைக் பட்டனை இயக்கிவிட்டு, உதவியாளரிடம் பேசுவது போல பேசினால், அந்த உள்ளடக்கத்தை எழுத்து வடிவில் பகிரக்கூடியதாக இந்த தளம் தட்டச்சு செய்து தருகிறது. அலுவலக கூட்டத்திற்கான குறிப்பு துவங்கி, சமூக ஊடக பதிவு அல்லது வலைப்பதிவுக்கான கட்டுரை வரை இதில் தயார் செய்து கொள்ளலாம்.
பேசுவதை அப்படியே பிரதியெடுத்து தரும் இணைய சேவைகளும், செயலிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஆடியோ பென் சேவையில் என்ன வேறுபாடு என்றால், இது பேசப்படும் உள்ளடக்கத்தை பிரதியெடுத்து தருவதோடு அதை திருத்தி தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உள்ளடக்கத்தை முறையாக எழுதி தருவதாக கூறுகிறது.
பேச்சு நடுவே உண்டாகும் தொண்டை கணைப்பு, இருமல் போன்றவற்றை எல்லாம், களைந்துவிட்டு, ஒரு முறைக்கு மேல் வருவதை எல்லாம் திருத்தி தெளிவான உள்ளடக்கமாக வழங்குவதாகவும் தெரிவிக்கிறது.
ஆங்கில மொழி பேச்சுக்கான இந்த சேவை இலவசமானது. கட்டண சேவையை நாடினால் மற்ற மொழிகளில் பேசும் வசதியோடு கூடுதலான திருத்தம் சார்ந்த அம்சங்களை பெறலாம்.
சாட்ஜிபிடியை வழங்கிய ஓபன் ஏஐ நிறுவன சேவை சார்ந்து இந்த ஆடியோ பென் உருவாக்கப்பட்டுள்ளது.
-
இதே போலவே அமைந்துள்ள மற்றொரு சேவை கிளவர்மெசேஜ் (https://clevermsg.io/ ). இந்த இணையதளம், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்களில் பகிர்வதற்கான செய்தியை உருவாக்கித்தருகிறது. என்ன விதமான செய்தி தேவை என தெரிவித்தால் அதற்கேற்ற செய்தியை இந்த தளம் அளிக்கிறது. செய்திக்கான பதில் செய்தி அனுப்பவும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அன்றாட வாழ்வில் ஏஐ பயன்பாட்டை உணர்த்தும் சேவைகள் இவை!
அவசியமான தகவல். நன்றி!