இரண்டு நிமிடத்தில் உங்களுக்கான இணையதளம்
இரண்டு நிமிடத்தில் சொந்த இணையதளம் அமைத்துக்கொள்ள உதவும் இணையதளம் பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆனால், இதை நிறைவேற்றிக்கொள்வதில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது நீங்கள் ஏற்கனவே லிங்க்டுஇன் சேவையில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தான்.
அதோடு, உங்கள் லிங்க்டுஇன் விவரங்கள் துடிப்பானதாக இருந்தால் உங்களுக்காக அமைக்கப்படும் அறிமுக இணையதளமும் துடிப்பானதாக இருக்கும். ஏனெனில், இந்த தளம், பயனாளிகளின் லிங்க்டுஇன் தகவல்களை கொண்டே அவர்களுக்கான இணையதளத்தை அமைத்து தருகிறது.
லிங்க்டுஇன், தொழில்முறை ஊழியர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதில் ஊழியர்கள் தங்கள் தொழில்முறை தகவல்களை இடம்பெற வைத்து தொழில் சார்ந்த தொடர்புகளை உருவாக்கி கொள்ளலாம். வேலை தேடுவதற்கான மேடையாகவும் இது பயன்படும்.
லிங்க்டுஇன் தொழில்முறை நோக்கில் எண்ணற்ற அம்சங்களை கொண்டிருந்தாலும் அதன் இடைமுகம் சிக்கலானது. உறுப்பினர்களே கூட, தங்கள் தகவல்களையும், கட்டுரைகளையும் இன்னும் பிற இணைப்புகளையும் கண்டறிவது சிக்கலானது.
இந்த இடத்தில் தான் வைட்டாலிட்டி (https://www.vitaely.me/ ) லிங்க்டுஇன் விவரங்களை கொண்டு பயனாளிகளுக்கான அழகான அறிமுக இணையதளத்தை உருவாக்கித்தருவதாக சொல்கிறது. தொழில்முறை தொடர்புகளை நாடுபவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். கட்டுரைகள், முக்கிய இணைப்புகள், சமூக ஊடக கணக்குகளை இணைத்துக்கொள்ளலாம்.
ஆனால், லிங்க்டுஇன் பக்கத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் தனியுரிமை நோக்கில் சிந்திக்க வேண்டும்.
-