எல்லா சாட்பாட்களுடனும் உரையாட இந்த சேவை
சாட்ஜிபிடி தவிர இன்னும் பல ஏஐ சார்ந்த சாட்பாட் சேவைகள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றில் சாட்ஜிபிடி, கூகுள் பார்ட் போன்றவற்றை நீங்கள் முயன்றும் பார்த்திருக்கலாம். மற்ற முன்னணி சாட்பாட் சேவைகளை தெரிந்து கொள்வதோடு, அவற்றை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பயன்படுத்தி பார்க்க விரும்பினால், சாட் ஆல் (ChatALL ) அதை சாத்தியமாக்குகிறது.
சாட்ஜிபிடி தவிர, அல்பகா, வின்குனா, கிளாட் (Alpaca, Vincuna, and Claude ) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சாட்பாட்களில் ஒரே இடத்தில் உரையாட இந்த சேவை வழி செய்கிறது. இதில் ஏதேனும் கேள்விகள் கேட்டால், சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களில் அவற்றுக்கான பதிலை பெற்று வரிசையாக அளிக்கிறது.
பலவித சாட்பாட்களை பயன்படுத்தி பார்க்க விரும்புகிறவர்களுக்கு இந்த சேவை கைகொடுக்கும். ஆனால் இணையதளமாக இந்த சேவை இல்லை. கோடிங் தளமான கித்ஹப்பில் இருந்து இந்த சேவையை தறவிறக்கம் செய்ய வேண்டும்.- https://github.com/sunner/ChatALL/releases
கூகுளுக்கு முன்னர் அல்டாவிஸ்டா, லைகோஸ் உள்ளிட்ட தேடியந்திரங்கள் பிரபலமாக விளங்கிய காலத்தில், ஒரே நேரத்தில் பல்வேறு தேடியந்திரங்களில் தேடி முடிவுகளை ஒப்பிட்டு பார்க்க உதவும் மெட்டா தேடியந்திரங்கள் பிரபலமாக இருந்தததை இந்த சேவை நினைவூட்டுகிறது.
நிற்க, சாட் ஆல் (http://www.chatallapp.com/ ) எனும் பெயரில் ஐபோனுக்கான செயலி ஒன்றும் இருக்கிறது. இந்த செயலி வாட்ஸ் அப் போல செய்திகளை அனுப்ப வழி செய்வதோடு, அந்த செய்திகளை பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதியை கொண்டிருப்பதால் புதிய மொழி கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
-
* சாட்ஜிபிடியை முன் வைத்து சாட்பாட்கள் வரலாற்றை விவரிக்கும் எலிசா முதல் சாட்ஜிபிடி வரை தொடர்.