காப்கா நாவல்களை வாசிக்க சிறந்த இணையதளம்
’கே’ எனும் ஆங்கில எழுத்து, காப்கா நாவல்களில் வரும் நாயகனின் பெயர் என்பதை அறிந்திருந்தால், பிரான்ஸ் காப்கா (Franz Kafka ) புனைவுலகம் உங்களுக்கு நன்கு அறிமுகமானது என பொருள். அதே நேரத்தில் காப்காவை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அவரது கதா நாயகன் ’கே’ நன்கு அறிமுகமானவராக விடுவார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
காப்கா பற்றியும், அவரது கதைகள் பற்றியும் இன்னும் விரிவாக குறிப்பிடலாம் என்றாலும், இந்த பதிவு காப்காகாவை அறிமுகம் செய்யும் நோக்கிலானது அல்ல: அந்த பணியை சிறப்பாக செய்யும் காப்கா ஆன்லைன் இணையதளம் (https://www.kafka-online.info/ ) தொடர்பானது.
காப்காவை அறிமுகம் செய்யும் ஒரு பக்க கட்டுரை போல அமைந்திருக்கும் இந்த இணையதளம், காப்கா கதைகளை இணையத்தில் வாசிப்பதற்கான சிறந்த வழியாகவும் அமைகிறது.
எழுத்தாளர்களுக்காக ரசிகர்களால் பராமரிக்கப்படும் இணையதள வகையைச் சேர்ந்த இந்த தளம், அதி தீவிர காப்கா ரசிகர் ஒருவரால் நடத்தப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட மற்றும் தாக்கம் நிறைந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரான்ஸ் காப்காவின் இணையதளத்திற்கு வாருங்கள் என முகப்பு பக்கத்தில் வரவேற்கும் இந்த தளம், அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன், காப்காவின் ஆகச்சிறந்த கதைகளுக்கான இணைப்பை அதன் இடப்பக்கத்தில் கொண்டுள்ளது.
கதைகளுக்கான இணைப்புகளை கிளிக் செய்தால், விசாரணை (The Trial), உருமாற்றம் (The Metamorphosis ), சட்டத்திற்கு முன் (before the law ) உள்ளிட்ட கதைகளை வாசிக்கலாம். கதைகள் எச்.டி.எம்.எல் வடிவில் எளிதாக வாசிக்கும் வகையில் அமைந்திருப்பதோடு, அடுத்தடுத்த பக்கங்களை கிளிக் செய்யும் போது மின்னூல் வடிவில் அமைந்திருப்பதும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை அளிப்பதாக இருக்கிறது.
அடிக்குறிப்புகள் எதுவும் இல்லாமல் கதைகளை வாசிக்கலாம். காப்காவின் சற்றே நீளமான அறிமுக பகுதியும் இருக்கிறது. காப்புரிமை தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விக்கிபீடியா பக்கம் உள்பட காப்காவை மேலும் அறிந்து கொள்வதற்கான இணைப்புகளும் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.- https://www.kafka-online.info/kafka-links.htm