உங்கள் ஏஐ அறிவை சோதிக்கும் இணையதளம்!
இந்த விஷயம் உண்மையில் இல்லை எனும் தளங்கள் வரிசையில் வருகிறது, இந்த உருவம் உண்மையில் இல்லை (https://thisimagedoesnotexist.com/) இணையதளம்.
ஏஐ ஆக்கங்களை முன்வைக்கும் இணையதளங்களாக இவை அமைகின்றன. அதாவது, ஏஐ மென்பொருள்களின் ஆக்கங்களை முன் வைத்து, இவை உண்மையில் இல்லை, ஆனால் ஏஐ திறனால் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த தளங்கள் அமைகின்றன.
இந்த மனிதர் உண்மையில் இல்லை எனும் பொருளில் அமைந்த ’திஸ் பர்சன் டஸ் நான் எக்சிஸ்ட்’ தான் இந்த வகை தளங்களின் முன்னோடி. இந்த தளத்தில் ஏஐ உருவாக்கிய மனித தோற்றங்களை வரிசையாக பார்க்கலாம். எல்லாமே, மனிதர்கள் போல தோன்றினாலும் எதுவுமே உண்மையான மனிதர் அல்ல. மனிதர்கள் போல ஏ.ஐ உருவாக்கிய மாயத்தோற்றங்கள்.
ஏ.ஐ ஆக்கம் பற்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த தளத்தை பின்பற்றி இந்த பூனை உண்மையில் இல்லை, இந்த கலைப்படைப்பு உண்மையில் இல்லை போன்ற இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லாமே, ஏ.ஐ ஆக்கங்களை முன்வைக்கும் தளங்கள்.
இந்த வரிசையில் இப்போது, இந்த உருவம் உண்மையில் இல்லை என பொருள்படும், திஸ் இமேஜ் டஸ் நாட் எக்சிஸ்ட் இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது.
ஆனால், முந்தைய தளங்களில் இருந்து மாறுபட்டு, ஏ.ஐ ஆக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.
இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ள ஏ.ஐ அரட்டை மென்பொருளான சாட்ஜிபிடியின் சகோதர மென்பொருளான டாலே இ மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட உருவங்களை இந்த தளம் பட்டியலிடுகிறது. இவற்றின் நடுவே, மனிதர்கள் உருவாக்கிய படங்களையும் காண்பிக்கிறது. நமக்கான சவால் என்னவெனில், எது ஏஐ ஆக்கம், எது மனித ஆக்கம் என்பதை கண்டறிந்து சொல்ல வேண்டும்.
இதன் மூலம் ஏஐ ஆக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. உண்மை எது, பொய் எது என கண்டறியும் சவாலாகவும் கொள்ளலாம். மொத்தம் 30 படங்கள் காண்பிக்கப்படும் நிலையில் அதிக பட்ச மதிப்பெண் இதுவரை 18 என்கிறது இந்த தளம்.
ஏஐ. ஆக்கம் படைப்பூக்கம் மற்றும் படைப்புத்திறன் தொடர்பான விவாதத்தை உண்டாக்கியுள்ள பின்னணியில் மிகவும் பொருத்தமான இணையதளம்.
-
-