சாட்ஜிபிடி தொடர்பான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எத்தனையோ தளங்களில் விடை காணலாம். ஆனால், சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவை தொடர்பான தத்துவார்த்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும் என்றால், மெட்டாபில்டர் போன்ற தளத்தை தான் நாட வேண்டும். இதற்கு உதாரணம் வேண்டும் எனில், தத்துவமும், சாட்ஜிபிடியும் எனும் தலைப்பில் வெளியாகியுள்ள மெட்டாபில்டர் பதிவை குறிப்பிடலாம்.
இந்த இடத்தில் மெட்டாபில்டர் (metafilter.com/ ) தளம் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இது என்ன கேள்விபடாத தளமாக இருக்கிறதே என பெரும்பாலானோருக்கு நினைக்கத்தோன்றினாலும், மெட்டாபில்டர் இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக இன்று சமூக ஊடகம் என வகைப்படுத்தப்படும் பயனர் பங்கேற்பும், பகிர்வு தன்மையும் கொண்ட தளங்களுக்கு முன்னோடியாக விளங்கும் முக்கிய தளங்களில் மெட்டாபில்டருக்கு தனி இடம் கொடுக்க வேண்டும்.
ஸ்லேஷ்டாட் அல்லது ரெட்டிட் போன்ற தளங்களை அறிந்தவர்கள் மெட்டாபில்டர் தளத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். இணைய விவாத குழு தன்மையுடன் கூடிய கூட்டு சமூக வலைப்பதிவு சேவையாக 1990 களில் அறிமுகமான மெட்டாபில்டர் தளத்தில், கேள்விபதில் பகுதியும் உண்டு.
இந்த கேள்வி பதில் பகுதியில் தான், சாட்ஜிபிடி அல்லது ஏஐ உருவாக்க மென்பொருளை பயன்படுத்துவது தொடர்பாக சிந்தித்துக்கொண்டிருக்கும் தத்துவவாதிகள் அல்லது தார்மீகவாதிகள் யாரையேனும் தெரியுமா எனும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள சக பயனாளி ஒருவர், டேமியன் வில்லியம்ஸ் எனும் சமகாலத்து அறிஞரை சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஜெர்மனியின் ஊடக அறிஞர்களின் முக்கியமான வால்டர் பெஞ்சமின் பெயரையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஊடக உலகில் இன்றளவும் முக்கிய பிரதியாக கொள்ளப்படும், பெஞ்சமினின் எந்திரமயமான மறு உருவாக்க காலத்தில் கலை செயல்பாடு எனும் கட்டுரையையும் குறிப்பிட்டிருக்கிறார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், கொஞ்சம் மெட்டாபில்டர் பக்கமும் சென்று பாருங்கள், பயனுள்ளதாக இருக்கும்.- https://ask.metafilter.com/369881/Philosophy-and-ChatGPT-and-or-AI-image-creation
-
இன்று தான் மெட்டா ஃபில்டர் பற்றி கேள்விப் படுகிறேன்! மிக்க நன்றி... உள் சென்று பார்க்கிறேன்!