தேவை தூய தமிழ் தேடுபொறி!
ஒரு தேடியந்திரமாக கூகுளின் போதாமைகளுக்கும், குறைகளுக்குமான இன்னொரு அழுத்தமான உதாரணமாக, தூய ஆங்கில தேடியந்திரத்தை எதிர்கொள்ள நேர்ந்தது உற்சாகம் அளிக்கிறது. ஆன்டிமூன் எனும் ஆங்கில பயிற்சி இணையதளம் வழங்கும் இந்த தேடியந்திரம் (https://www.antimoon.com/ce/) கூகுள் போல அல்லாமல், சரியான ஆங்கிலத்தில் தேட வழி செய்கிறது.
பொதுவான தகவல்களை தேடுவதற்கு வேண்டுமானால் கூகுள் சரியாக இருக்கலாம் ஆனால், ஆங்கில மொழி தகவல்களை தேடும் போது, கூகுள் பிழையான தகவல்களை அதிகம் காட்டுவதாக இந்த தளம் குற்றம் சாட்டுகிறது. இதற்கு காரணம், இணையத்தில் உள்ள பல தளங்களில் தப்பும் தவறுமான ஆங்கிலம் இடம்பெற்றிருப்பதே என்கிறது. இதன் விளைவாக கூகுளும் தேடலில் பிழையான ஆங்கில பக்கங்களையே அதிகம் பட்டியலிடுகிறது.
அதோடு, கூகுள் ஆங்கில் மொழி தொடர்பான தேடலில் தவறான எண்ணிக்கையையும் அளிப்பதாக இந்த தளம் குற்றம்சாட்டுகிறது. உதாரணமாக, “I have a question for you” எனும் சொற்றடரை தேடும் போது கூகுள் 1,600,000 பக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டாலும், உண்மையில் 437 பக்கங்களே இருப்பதாக சொல்கிறது.
இது போன்ற காரணங்களினால் ஆங்கிலம் மொழி வாசகங்கள் அல்லது வார்த்தைகளை தேட கூகுள் ஏற்றது அல்ல என்பதால், பிழையில்லாத ஆங்கிலம் கொண்ட தளங்கள் மற்றும் தரவுகளில் இருந்து மட்டும் தேட வழி செய்யும் வகையில் இந்த சரியான ஆங்கில தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ( கூகுள் தேடலை அடிப்படையாக கொண்டுள்ளது என்பது வேறு விஷயம்).
கூகுள் பிழையான ஆங்கில தகவல்களை அளிக்கிறது என்பதால் மாற்று தேடியந்திரம் தேவை என்பதை ஆங்கில மொழி அபிமானிகள் ஆதரிக்கவே செய்வார்கள்.
நிற்க இது போன்ற தூய தமிழ் தேடுபொறியும் தேவை தான். வாணி பிழைதிருத்தி மற்றும் திரள் திரட்டி சேவையை வழங்கி வரும் தமிழ் மென்பொருளாலர் நீச்சல்காரன் இத்தகைய தேடுபொறியை உருவாக்க கூடிய ஒருவர். முத்து நெடுமாறன் இன்னொருவர்.
ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதுவது பேசுவதை ஊக்குவிப்பது போலவே, தமிழில் பிழை இல்லாமல் பேசுவதை, எழுதுவதை வலியுறுத்தும் வகையில், வாணி பிழை திருத்தி சார்பில் அண்மையில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள்:https://vaanieditor.com/contest
-
-
https://www.antimoon.com/blog/2010/12/correct-english-search/
-