புளுஸ்கையை கண்காணிக்க ஒரு அகராதி
புளுஸ்கை தான் புதிய டிவிட்டர் என்று நினைக்கத்தோன்றுகிறது. புளுஸ்கை சார்ந்து உருவாகி வரும் துணை சேவைகளே இந்த எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. புளுஸ்கை பதிவுகளை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும், நீலவான அகராதி (https://www.avibagla.com/blueskydictionary/ ) இதற்கான அண்மை உதாரணம்.
இது வழக்கமான அகராதி அல்ல, இணைய யுகத்தின் புதுமையான அகராதி. இதன் நோக்கம், ஆங்கில அகராதியில் உள்ள சொற்கள், புதிய குறும்பதிவு சேவையான புளுஸ்கை பதிவுகளில் தோன்றுவதை பின் தொடர்ந்து கண்காணிப்பதாகும். இந்த கண்காணிப்பின் அடிப்படையில் புளுஸ்கை பதிவுகளில் இடம்பெறும் புதிய சொற்களை அடையாளம் காட்டுகிறது.
ஆங்கில அகராதி சொற்கள் ஒவ்வொருன்றும் புளுஸ்கையில் இடம்பெறுமா? எனும் கேள்வியை கொண்டுள்ள இந்த தளத்தில், நொடிப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும் எண்ணிக்கை பலகையை காணலாம்.
முதல் பலகை மாறிக்கொண்டே இருக்கும் எண்கள் புதிய சொற்கள் எண்ணிக்கையை உணர்த்துகிறது. அருகே உள்ள எண்ணிக்கை பலகை கவனத்தில் கொள்ளப்பட்ட பதிவுகள் எண்ணிக்கையை குறிக்கிறது.
இதன் கீழ், புதிய சொற்கள் அடையாளம் காட்டப்பட்டு, அதற்கும் கீழ் புதிய சொற்களை கொண்ட பதிவுகள் முன்னிறுத்தப்படுகின்றன.
அதற்கும் கீழே, புதிய சொற்களின் தேடக்கூடிய பட்டியல் மற்றும் இதுவரை இடம்பெறாத சொற்களின் தொகுப்பு இடம் பெறுகிறது.
புளுஸ்கை பதிவுகள் வாயிலாக புதிய சொற்களை அறிமுகம் செய்து கொள்ளவும், சொற்கள் வாயிலாக புதிய புளுஸ்கை கணக்குகளை அறிமுகம் செய்யவும் உதவுகிறது இந்த அகராதி.
புளுஸ்கை பதிவுகள் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை சுவாரஸ்யமாக இருக்கிறது. அவி பக்லா (avibagla.com ) என்பவர் உருவாக்கியிருக்கிறார்.
நிற்க, எக்ஸாக மாறிவிட்ட டிவிட்டர் குறும்பதிவு சேவையாக அறிமுகமான போது, அதைச்சார்ந்து மூன்றாம் தரப்பினர் உருவாக்கிய துணை சேவைகள் எண்ணற்றவை அறிமுகமாயின. டிவிட்டர் வளர்ச்சிக்கு இந்த துணை சேவைகளும் உதவின என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.