இசை பரிந்துரை இணையதளம்
’சாங்ஸ்லைக் எக்ஸ்’ (https://songslikex.com) இசை பிரியர்கள் பொருட்படுத்தக்கூடிய இணையதளமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்கள் கவனத்தை ஈர்க்ககூடிய தளம் தான். எப்படி எனில், இசைப்பிரியர்கள் கேட்டு ரசித்த பாடலின் அடிப்படையில் அவர்கள் கேட்டு ரசிக்க கூடிய அதே போன்ற பாடல்களின் பட்டியலை இந்த தளம் பரிந்துரைக்கிறது.
இசை பரிந்துரை தேடியந்திரம் போல தோற்றம் தரும் இந்த தளத்தில், பயனாளிகள் தங்களுக்கு பிடித்தமான பாடலை குறிப்பிட்டால், அந்த பாடல் போன்ற தன்மை கொண்ட, மற்ற பாடல்களை, கேள் பட்டியலாக ( பிளே லிஸ்ட்) அளிக்கிறது. பட்டியலில் உள்ள பாடல்களை ஸ்பாட்டிபையில் கேட்கும் வசதியும் இருக்கிறது.
புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த பரிந்துரை பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், இப்பட்டியல் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய விளக்க குறிப்புகள் இல்லை. மாறாக, இந்த பட்டியல் எந்த அடிப்படையும் இல்லாமல் தோராயமாக தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு ஒரு முறை வந்த பட்டியல் இன்னொரு முறை வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த பரிந்துரை எந்த அளவு வலுவானது எனத்தெரியவில்லை. ஆனால் சுவாரஸ்யமானது என்பதில் சந்தேகம் இல்லை.
-