தினம் ஒரு வானியல் ஓவியம்
ஆஸ்ட்ரானமி ஸ்கெட்ச் ஆப் தி டே (http://www.asod.info/ ) தளத்தை இரண்டு காரணங்களுக்காக முக்கியமானதாக கருதலாம். தினந்தோறும் ஒரு வானியல் ஓவியத்தை இடம்பெற வைக்கும் வகையில் இந்த தளம் அமைந்திருந்ததே இந்த தளத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய முதல் அம்சமாக அமைகிறது.
வானியல் சார்ந்த தளங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், வானியல் தகவல்களை ஓவியம் வடிவில் வழங்கும் தளமாக இது விளங்குகிறது.
இந்த தளத்தில் தினம் ஒரு வானியல் வரைப்படத்துடன் அந்த நிகழ்வு தொடர்பான ஆய்வு தகவல்களும் இடம்பெறுகின்றன. வானியல் ஆய்வு தகவல்களை ஓவியமாக வரைந்து பகிர்வது எனும் போது அதன் பின்னே இருக்க கூடிய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் புரிந்து கொள்ளலாம். இந்த தளத்தில், வாசகர்களும், அதாவது வானியல் ஆர்வலர்களும் தங்கள் ஓவியங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் பகிரப்பட்ட வானியல் வரைப்படங்களை பார்க்கும் போது வானியலில் இத்தனை ஆர்வமா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த தளம் தொடர்பான இரண்டாவது முக்கிய அம்சம், இந்த தளம் ஆவணமாக்கப்பட்டிருக்கும் தன்மை. 2007 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த தளம், 2015 ம் ஆண்டுக்கு பின் புதுபிக்கப்படவில்லை. ஆனால், இந்த தளம் கைவிடப்படாமல் இருக்கிறது. அதாவது, இந்த தளம் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
தளத்தின் நிலை தொடர்பான இந்த அறிவிப்பு, அதன் நோக்கத்தையும், செயல்பாட்டையும் உணர்த்து, அதன் பழைய பதிவுகளை அணுக வைக்கிறது.
பழைய நல்ல தளங்கள் பல காணாமல் போவதோடு, அவை உருவாக்கப்பட்ட காரணத்தை கூட அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதே இணைய உலகில் பெரும்பாலும் எதிர்கொள்ளக்கூடிய அனுபவமாக இருக்கும் போது, தளத்தின் நிலையை உணர்த்தும் முறையான அறிவிப்பு ஆசுவாசம் தரக்கூடியது.
ஒருவிதத்தில் பார்த்தால், தினம் ஒரு வானியல் புகைப்படத்தை வெளியிட்டு வரும் மைல்கல் இணையதளமான ஏ ஆஸ்ட்ரானமி போட்டோ ஏ டே தளத்தைப்போலவே, இந்த தளம் அமைந்துள்ளது.
இன்னொரு விஷயம், இந்த தளத்தை நடத்தி வந்த ஜெர்மி பெரேஸ், பெரேஸ் மீட்யா.நெட் எனும் சொந்த இணையதளத்தை வைத்திருக்கிறார். வானியலும், கலையும் இணையும் பல இணையதிட்டங்களை அவர் மேற்கொண்டு வருவதை எளிமையாக வடிவமைக்கப்பட்ட அந்த தளத்தில் அறிய முடிகிறது.
*