பீட்டில்ஸ் புத்தகங்களை கேட்க ஒரு பாட்காஸ்ட்டிங் சேவை!
பி.டி.எஸ்., எல்லாம் இருக்கட்டும், வரலாற்றில் பீட்டில்ஸ் அளவுக்கு புகழ் பெற்ற இசைக்குழு இருக்க முடியுமா என்ன? அவர்கள் வந்த வேகமும், வளர்ந்த வேகமும் தான் என்ன? இன்றளவும் பீட்டில்ஸ் போல கொண்டாடப்பட்டு வரும் இசைக்குழுவும் இல்லை. இணைய உலகில் பீட்டில்ஸ் தொடர்பாக இருக்கும் விதவிதமான இணையதளங்களே இதற்கு சான்று.
பீட்டில்ஸ் தொடர்பான ஆய்வுகளும், அலசல்களும், உபாசனைகளும், விமர்சன விவாதங்களும் தொடர்வதால், இக்குழு தொடர்பான பதிவுகளுக்கும் குறைவில்லை. பீட்டில்ஸ் தொடர்பான புத்தகங்களுக்கும் குறைவில்லை.
பீட்டில்ஸ் புத்தகங்களுக்கு என்று இணையதளங்கள் அமைக்கப்படும் அளவுக்கு, பீட்டில்ஸ் பற்றி பலரும் எழுதி தள்ளியிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?
பீட்டில்ஸ் புத்தகங்களுக்கான இணையதளங்கள் பற்றி தனியே பார்க்கலாம், இப்போது பீட்டில்ஸ் புத்தகங்கள் பற்றி பேசும் பாட்காஸ்ட்டிங் சேவை பற்றி பார்க்கலாம்.
பீட்டில்ஸ் புக்ஸ் (https://beatlesbooks.podbean.com/ ) எனும் பெயரில் பாட்பீன் பாட்காஸ்ட்டிங் மேடையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு பகுதியிலும் பீட்டில்ஸ் புத்தக ஆசிரியர் ஒருவருடன் உரையாடுகின்றனர். இது தொடர்பான அறிமுக குறிப்பை படிக்கும் போதே சுவாரஸ்யமாக இருக்கிறது. பீட்டில்ஸ் பயன்படுத்திய ஒலிப்பதிவு கூடத்தின் கதை பற்றி ஒருவர் எழுதியிருக்கிறார். பீட்டில்ஸ் குழுவினரின் பிறப்பிடமான லிவர்பூல் நகரின் படைப்பூக்க சூழல் பற்றி ஒருவர் எழுதியிருக்கிறார். பீட்டில்ஸ் குழுவின் முக்கிய உறுப்பினரான லென்னான் பாடல் எழுதிய விதம் பற்றி ஒருவர் எழுதியிருக்கிறார்.
இப்படி ஒவ்வொரு பீட்டில்ஸ் புத்தக ஆசிரியரையும் அறிமுகம் செய்து அவர்களுடன் பீட்டில்ஸ் அனுபவம் பற்றி உரையாடுவதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. பீட்டில்ஸ் பிரியர்கள் சொக்கிப்போவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழகத்தில் இளையராஜா உள்ளிட்ட ஒரு இசைக்கலைஞர் அல்லது இசைக்குழுவை இப்படி கொண்டாடியிருக்கிறோமா எனும் ஏக்கத்துடன் பீட்டில்ஸ் புத்தகங்களை கேளுங்கள்