பிடிஎப் கோப்பில் கையெழுத்திட உதவும் தளம்
ஒற்றை நோக்கிலான இணையதளங்கள் என ஒரு வகை இருக்கிறது. வேறு எந்த துணை அம்சங்கள் அல்லது உப சேவைகள் இல்லாமல், ஒரே ஒரு பயன்பாட்டை கொண்டதாக அமைக்கப்படும் இணையதளங்கள். இந்த வகை தளங்களுக்கு சுவாரஸ்யமான உதாரணங்கள் பல இருக்கின்றன. *
ஒற்றை நோக்கிலான இணையதங்களில் சில, பயன்பாட்டு நோக்கில் பயனற்றவையாக கூட இருக்கலாம் என்றாலும் சின்ன புதுமையோடு சுவார்ஸ்யமானதாக இருக்கலாம். *
பிடிஎப் கையெழுத்து போல உதவும் ’ஜஸ்ட்சைன்பிடிஎப்’ (https://justsignpdf.com/) இணையதளம், இத்தகைய ஒற்றை நோக்கிலான இணையதளங்களின் வரிசையில் வருகிறது. பெயர் உணர்த்துவது போலவே, இந்த தளம் பிடிஎப் கோப்புகளில் கையெழுத்திட வழி செய்கிறது. வேறு எந்த வசதியோ, அம்சமோ இதில் கிடையாது.
பிடிஎப் கோப்பில் கையெழுத்திடும் வசதியையும் மிக எளிதாக வழங்குகிறது. கோப்பை பதிவேற்றும் தேவையில்லாமல், கம்ப்யூட்டரில் சென்று தேடி அல்லது அங்கிருந்து இழுத்து வந்து (Drag and drop) பயன்படுத்தலாம். உங்கள் பிடிஎப் கோப்புகளை எந்த ஒரு தெரியாத சர்வரிலும் பதிவேற்ற வேண்டாம், உங்கள் கம்ப்யூட்டரிலேயே செயலாக்கம் செய்து கொள்ளவும் என்று எச்சரிக்கையுடன் இந்த வசதியை வழங்குகிறது.
கவனத்தை ஈர்க்கும் எளிமையான சேவை தான். ஆனால், தளத்தைப்பற்றிய எந்த தகவலும் இல்லாமல் அல்லது அறிமுக பகுதி இல்லாதது தான் கொஞ்சம் இடிக்கிறது. இந்த தளம் வழங்கும் எச்சரிக்கையை மீறி, இதில் மட்டும் எப்படி கோப்புகளை சமர்பிக்கல்லாம் என கேட்கலாம். பொதுவாக இணையத்தில் பயன்படுத்தும் பல சேவைகளுக்கு இந்த கேள்வியை கேட்டுக்கொள்வது நல்லது.
தொழில்முறை நோக்கில், பிடிஎப் கையெழுத்திடும் அம்சம் தேவைப்பட்டால் அடோபி போன்ற அதிகாரப்பூர்வ தளங்களை நாடுவதே ஏற்றது.