யூடியூப் வீடியோ சுருக்க சேவை
ஏஐ நுட்பங்களை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு எய்டிபை (Eightify ) சேவை நல்ல உதாரணம். ஏஐ சேவையை எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதற்கும் இந்த சேவையை உதாரணமாக கருதலாம். இந்த முரண்நகையை விளங்கி கொள்ளலாம் வாருங்கள்.
எய்டிபை, யூடியூப் வீடியோக்களை முழுவதும் பார்க்காமல், அதன் சாரம்சத்தை சுருக்கமாக தெரிந்து கொள்வதற்கு உதவும், வீடியோ சுருக்க சேவை. கல்வி சார்ந்த வழிகாட்டல் வீடியோ உள்ளிட்ட நீளமான வீடியோக்களை எதிர்கொள்ளும் போது, அதன் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ள இந்த சேவை உதவுகிறது.
குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக மற்றும் செயலி வடிவில் இருப்பதால் இதை பயன்படுத்துவது எளிது. பார்க்க விரும்பும் வீடியோ சுருக்கத்தை உடனடியாக வழங்குகிறது.
வீடியோவின் முக்கிய தருணங்களை சுட்டிக்காட்டவும் செய்கிறது. எந்த அளவு சுருக்க வேண்டும் என்ற குறிப்புகளையும் வழங்கலாம். சாட்ஜிபிடி சார்ந்த சேவை தான் என்றாலும், சாட்ஜிபிடியை விட வேகமாக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சாட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, வீடியோ சுருக்கத்திற்கான கட்டளைகளை எழுத வேண்டும். ஆனால் இதில் தானாக சுருக்கம் அளிக்கப்படுகிறது.
வீடியோ பார்க்க நேரமில்லை என நினைப்பவர்கள் அல்லது வீடியோ பொறுமையை சோதிப்பதாக நினைக்கும் போது இந்த வீடியோ சுருக்க சேவையை பயன்படுத்தலாம்.
நேரத்தை மிச்சமாக்குகிறது எனும் வகையில் இந்த சேவையை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், எழுத்து வடிவை விட, வீடியோ வடிவம் பார்ப்பதற்கு எளிதாக இருப்பதாக பரவலாக கருதப்படும் நிலையில், வாசிக்கும் சுமையில் வீடியோ விடுவிப்பதாக பலரும் கருதும் போது, வீடியோக்களை சுருக்கமாக்கி எழுத்து வடிவில் அளிக்கும் சேவையை எப்படி புரிந்து கொள்வது?
ஏஐ நுட்பத்தால் வீடியோக்களை சுருக்க முடியும் என்பதால், இதை மையமாக கொண்ட ஏஐ சேவைகளை எப்படி முக்கியமானதாக கருத முடியும்?
அதோடு, இந்த சுருக்கங்கள் எந்த அளவு துல்லியமானவை என்பதும் கேள்விக்குறியே. இதை உறுதி செய்து கொள்வது எப்படி என்பது இன்னொரு கேள்வி.
நிற்க, எய்டிபை சேவை பல விரிவான அம்சங்களை கொண்டுள்ளது. கட்டணச்சேவை. ஆனால் சில இலவச மாற்று சேவைகளும் இருக்கின்றன. -
-
வீடியோ சுருக்க சேவையை, நீள் கட்டுரைகளை சுருக்கமாக அணுகும் டிஎப்டிஆர் வசதியோடு ஒப்பிடலாம். இது தொடர்பான சுவாரஸ்யமான சேவைகளை பார்க்கலாம்.