அலுவலக கூட்டங்களை ரத்து செய்ய ஒரு இணையதளம்
இப்போது நாம் பார்க்க இருக்கும் இணையதளம் தொழில்முறை பணியாளர்களுக்கானது. அதற்காக, இந்த தளம் பிரத்யேகமானது என நினைத்துவிட வேண்டாம். விஷயம் என்னவென்றால், தொழில்முறை பணியாளர்கள் மட்டுமே எதிர்கொள்ளும் அலுவல் தலைவலிக்கான தீர்வாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேலை நடக்கிறதோ இல்லையா, அலுவல நோக்கிலான கூட்டங்கள் தொழில்முறை வாழ்க்கையில் தவிர்க்க இயலாதது.
அணி தலைவர் அல்லது மேலாளர் அல்லது தலைமை அதிகாரி என யாராவது ஒருவர் திடிரென அல்லது திட்டமிட்ட கூட்டத்திற்கு தகவல் அனுப்பலாம். கூட்டம் முக்கியமானதா, பயனுள்ளதா என்பது அதில் பங்கேற்றால் தான் தெரியும். ஆனாலும் பணியாளர்களால் மறுத்து சொல்லவோ மாற்று கருத்து சொல்லவோ முடியாது.
பணியாளர்களுக்கு வேறு முக்கிய வேலை இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
இத்தகைய சூழலில், தேவையில்லாதது என கருதும் கூட்டங்களை ரத்து செய்வதற்கான சேவையாக, மீட்கேலா (https://meetcala.com/ ) தளம் அறிமுகம் ஆகியுள்ளது. டேட்டிங் சேவையான டிண்டர் பிரபலமாக்கிய இடப்பக்கம் தள்ளும் வழியை கொண்டு, கூட்டங்களை ரத்து செய்ய இந்த தளம் வழி செய்கிறது.
டிண்டர் பற்றி அறிந்தவர்களுக்கு, அது பிரபலமாக்கிய இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் தள்ளுதல் எனும் ஸ்வைப் செய்வதன் பொருள் தெரியும். வலப்பக்கம் தள்ளினால் அழைப்பை ஏற்பதாக பொருள், இடப்பக்கம் என்றால் நிராகரிப்பதாக பொருள்.
டேட்டிங்கில் கைகொடுக்கும் இந்த நகர்வுகளையே கூட்டத்திற்கும் இந்த தளம் பயன்படுத்துகிறது. கூட்டத்திற்கான அழைப்பு வரும் போது இடப்பக்கம் அதை இடப்பக்கம் தள்ளினால் கூட்டம் வேண்டாம் என பொருள். இப்படியே எல்லோரும் சொன்னால் கூட்டம் ரத்தாகிவிடும். ஆனால், எல்லோரும் சொல்லும் வரை, நீங்கள் இடப்பக்கம் தள்ளி வேண்டாம் என்றது மற்றவர்களுக்கு தெரியாது. எனவே பின்விளைவுகள் பற்றி கவலை இல்லாமல் கூட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கும் சேவையாக இது அமைகிறது.
அலுவலக கூட்டம் பற்றி புலம்பும் பழக்கம் கொண்டவர்களுக்கு பயனுள்ள சுவார்ஸ்யமான சேவை. ஆனால் இந்த தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அலுவலக இமெயில் முகவரியுடன் கூட்டங்களுக்கான நாட்காட்டிக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இது தனியுரிமை கவலைகளை ஏற்படுத்தலாம்.
-