2021 ம் ஆண்டை இனிதாக்க ஒரு இணையதளம்
இன்றைய இணையதள அறிமுகத்தையும் ஒரு கேள்வியுடன் துவக்கலாம். இணையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழு ஒன்றில் இணைய நீங்கள் தயாரா? ஆனால், இந்த கேள்வியே கூட தேவையில்லாதது. ஏனெனில் இந்த குழுவை பற்றி தெரிந்து கொண்டால் நீங்களாகவே விரும்பி இதில் இணைந்து கொள்ளலாம். அப்படி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு.
தி பெஸ்ட் இயர்.கிளப் (https://thebestyear.club/ ) எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய குழுவின் நோக்கம், எதிர்வரும் 2021 ம் ஆண்டை சிறந்த ஆண்டாக மாற்றுவதற்கு நம்மால் இயன்றவற்றை செய்ய ஊக்குவிப்பது தான்.
விடைபெற இருக்கும் 2020 ம் ஆண்டு எத்தனை சோதனையானது என்பது உங்களுக்கேத் தெரியும். நூற்றாண்டு நிகழ்வு என வர்ணிக்கப்படும் கொரோனா பெருந்தொற்று, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, நம் வாழ்க்கையை தற்காலிகமாக தலைகீழாக மாற்றியிருக்கிறது.
கொரோனா தொற்றால், அமலாக்கப்பட்ட பொது முடக்கம், சமூக இடைவெளி தேவை ஆகியவை சமூக நோக்கிலும் சரி, தனிநபர்கள் நோக்கிலும் சரி எத்தனை சவாலாக அமைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இதன் காரணமாக, பலரும் 2020 ஆண்டு வருடத்தை பழிக்கத்துவங்கியுள்ளனர். பல விதங்களில் இது மோசமான ஆண்டு தான், சந்தேகமில்லை: அதற்காக மீம்களில் 2020 ஆண்டை கேலி செய்து கொண்டிருப்பதால் என்ன பயன்?
அதனால் தான், சோதனையான 2020 ம் ஆண்டு விடைபெறும் நிலையில், இனி வர இருக்கும் 2021 ம் ஆண்டில் கவனத்தை செலுத்தும் வகையில், தி பெஸ்ட் இயர்.கிளப் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
2021 ம் ஆண்டை சிறந்த ஆண்டாக உருவாக்குவது தான் இந்த தளத்தின் நோக்கம். இதற்காக தான் உறுப்பினர்களை திரட்டிகொண்டிருக்கிறது. என்னையும், உங்களைப்போன்றவர்களையும், இதற்கான குழுவில் இணையச்சொல்லி அழைக்கிறது.
சரி, இந்த குழுவில் இணைந்து என்ன செய்ய வேண்டும்? பெரிதாக எதுவுமே இல்லை: அடுத்த ஆண்டு மாதந்தோறும் சின்னதாக ஒரு நல்ல செயலை மேற்கொள்ள உறுதி கொள்ள வேண்டும். அவ்வளவு தான் இந்த தளம் உங்களிடம் கேட்கிறது.
2020 ம் ஆண்டில் கடும் சோதனைகளுக்கு மத்தியிலும், பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து, மனிதநேயத்தை வெளிப்படுத்தினர் அல்லவா? இதையே இந்த ஆண்டு கொஞ்சம் திட்டமிட்டு செய்ய ஊக்குவிக்கிறது இந்த தளம்.
எனவே, புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்வது போல, வரும் ஆண்டு ஏதேனும் ஒரு நல்ல செயலை மேற்கொள்வதாக தீர்மானித்து, அதை மாதந்தோறும் செய்து வர வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் செயல என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மற்றவர்களுக்கு பலன் தரும் வகையில் இருந்தால் போதுமானது.
இந்த உறுதிமொழிக்காக, இந்த தளத்தில் உறுப்பினராகி, அதன் பிறகு மாதம் ஒரு நல்ல செயலை செய்து, அதை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். ஆல் தி பெஸ்ட். வரும் ஆண்டை சிறந்த ஆண்டாக்க மாற்றுவோம்!
இணையதள முகவரி: https://thebestyear.club/
-