2 நிமிடத்தில் நண்பராக்கும் இணையதளம்
உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில், மைக் மற்றும் காமிராவை ஆன் செய்துவிட்டு அணுக வேண்டிய தளம் ’வைரஸ்கேப்’ (https://virus.cafe/). ஏனெனில், இந்த தளம் அறிமுகம் இல்லாத இணையவாசி ஒருவருடன் உங்களை உரையாட வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு நிமிடம் உரையாடி, புதிதாக ஒருவரை நண்பராக்கி கொள்ளலாம் என்றும் இந்த தளம் அழைக்கிறது.
இந்த தளம் செயல்படும் விதமும் எளிமையாக இருக்கிறது. அறிமுகம் இல்லாதவருடன் வீடியோ உரையாடலுக்கு தயார் என்றால், முகப்பு பக்கத்தில் உள்ள துவக்கவும் பட்டனை ( டூ ஸ்டார்ட்) கிளிக் செய்ய வேண்டும்.
இதனையடுத்து யாராவது ஒருவருடன் நீங்கள் உரையாட ஜோடி சேர்க்கப்படுவீர்கள். அவருடன் வீடியோவில் 2 நிமிடம் பேச வேண்டும்.
இங்கு தான் சுவாரஸ்யமே இருக்கிறது. நீங்கள் இஷ்டம் போல பேசவும் கூடாது தேவையில்லாமல் வம்பளக்கவும் கூடாது. உங்களுக்கு என ஒரு கேள்வி கொடுக்கப்படும். அந்த கேள்வி தொடர்பாக மட்டுமே பேச வேண்டும்.
வாழ்க்கையில் நீங்கள் மிகவும் மகிழ்ந்த தருணம் எது? என்பது போல சிந்தனையை தூண்டும் வகையில் கேள்விகள் அமைகின்றன.
கொரோனா பாதிப்பால் பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலில், சுவாரஸ்யமான முறையில் உலகலாவிய நட்பு வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையம் சார்ந்த பரிசோதனைக்கு தயார் என்றால் முயன்று பாருங்கள். உங்கள் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்!
பி.கு: வீடியோ உரையாடல் சேவை என்று வரும் போது, ’சாட்ரவுலெட்’ தளம் பற்றி பேசாமல் இருக்க முடியாது. இணைய வரலாற்றில் சாதனை தளமாக திகழும் இந்த சர்ச்சைக்குறிய சேவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
-
நாடகம் நிறுத்தப்பட வேண்டும்
ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு நிதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா அச்சத்தையும் மீறி, அமெரிக்கர்கள் பெருமளவில் வீதிக்கு வந்து, ஜார்ஜ் பிளாய்டை பலி வாங்கிய, இனவெறி மற்றும் காவல்துறை வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த மக்கள் போராட்டம் இணையத்திலும் வலுவாக எதிரொலிக்கிறது. கருப்பர் உயிர்கள் முக்கியம் என்பதை குறிக்கும் பிளாக்லைவ்ஸ்மேட்டர், ஹாஷ்டேகை முன்னிறுத்தி பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுடன் ஒன்றாக நிற்கும் வகையில், இசை ஒலிபரப்பை ஒரு நாள் நிறுத்தி வைப்போம் எனும் கோரிக்கையை வலியுறுத்தி தி ஷோ மஸ்ட் பி ஸ்டாப்டு எனும் இணையதளம் அமைக்கப்பட்டது. கருப்பு பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில், ஜார்ஜ் பிளாய்டு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுக்காக, ஒரு நாள் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை தள்ளி வைத்து விட்டு ஆதரவு தெரிவிப்போம் என்று இந்த தளம் கோரிக்கை வைத்தது.
இசைத்துறைக்கு கருப்பின மக்கள் பெருமளவு பங்களிப்பு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி கிடைக்க இசைத்துறை ஒரு நாள் நிகழ்ச்சிகளை நிறுத்துவது பொருத்தமானது என இந்த தளம் தெரிவிக்கிறது.
இசைத்துறையை சேர்ந்த இரண்டு பெண்கள் உருவாக்கிய இந்த தளம், தொடர்ந்து கருப்பின மக்களுக்கு ஆதரவான செயல்பாட்டில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கிறது.
இணையதள முகவரி: https://www.theshowmustbepaused.com/