ரெட்டிட் மகத்துவம் உணர்த்தும் புதிய இணையதளம்
இப்போது பார்க்க இருக்கும் இண்டிபல்ஸ் (https://www.indiepulse.co/ ), ஸ்டார்ட் அப் துறையில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு எந்த அளவு ஈர்ப்புடையதாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால், ரெட்டிட், துணை ரெட்டிட்களின் மகத்துத்துவத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் உங்கள் சமூக ஊடக பயன்பாட்டிற்கான கண் திறப்பாகவும் அமையலாம்.
உங்களுக்கான அடுத்த பகுதி நேர திட்டத்தை கண்டறியுங்கள் என அழைக்கும் இண்டிபிளஸ் உண்மையில், சிறிய அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்குவதற்கான எண்ண கீற்றை பெற வழி காட்டுகிறது. அதாவது, ஸ்டார்ட் அப் முயற்சியில் இருக்கும் நபர்கள், அதற்கான ஊக்கமும், உந்துதலும் பெற விரும்பினால், இந்த தளம் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்க வழிகாட்டும் ஐடியாக்களை அடையாளம் காட்டுகிறது.
புதிய நிறுவனம் அல்லது பகுதிநேர திட்டத்தை துவக்குவதற்கான உந்துசக்தி ஐடியாக்களை இந்த தளம் எப்படி அடையாளம் காட்டுகிறது என்பது தான் கவனிக்கத்தக்க அம்சம்.
இந்த தளம், தகவல் சுரங்கமான ரெட்டிட் தளத்தில், ஸ்டார்ட் அப் தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்படும் துணை ரெட்டிட் குழுக்களின் உரையாடல்களையும், பதிவுகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் இருந்து ஐடியாக்களுக்கான மின்னல் வெட்டுகளை முன்வைப்பதாக சொல்கிறது.
பேஸ்புக்கும், டிவிட்டரும் சமூக ஊடகங்களுக்கான பிரபலமான உதாரணங்களாக முன்வைக்கப்பட்டாலும், இந்த மேடைகளில் நடக்கும் உரையாடல்களை விட அர்த்தம் உள்ள உரையாடல்களை அணுக வேண்டும் என்றால் ரெட்டிட் போன்ற தளங்களை நாட வேண்டும்.
ரெட்டிட் தளத்தை பயனாளிகளுக்கான பரந்து விரிந்த விவாதக்குழு எனலாம். பேஸ்புக் போல, லைக்குகளை எல்லாம் எண்ணிக்கொண்டிருக்கலாமல், தேர்ந்தெடுக்கும் தலைப்புகள் தொடர்பாக பயனாளிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, பதில் கருத்துக்களை அறியலாம். பெரும்பாலும்,புதிய உள்ளொளி அல்லது பயனுள்ள புரிதல் என கருதக்கூடிய தகவல்களையும், செய்திகளையும் ரெட்டிட் பகிர்வுகளில் அறியலாம்.
இப்படி எண்ணற்ற தலைப்புகளில் ரெட்டிட் தளத்தில் விவாத குழுக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தகவல் பொக்கிஷம் அல்லது தகவல் சுரங்கம் எனலாம். துடிப்பான இந்த விவாத அரங்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்கும் ரெட்டிட் உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.
ரெட்டிட் தளத்தில் விவாதிக்கப்படும் அம்சம் அல்லது பகிரப்படும் தகவல் பரவலாக கவனத்தை ஈர்த்து இணைய உலகில் செய்திகளாவதும் உண்டு.
அடிப்படையில் பயனாளிகளின் சமூகமான ரெட்டிட் தளத்தில், ஸ்டார்ட் அப் தொடர்பாக விவாதிக்கும் துணை குழுக்களும் அநேகம் உண்டு. ஸ்டார்ட் அப் துறையின் புதிய போக்கு, அதில் எதிர்பார்க்கப்படும் தீர்வுகள் உள்ளிட்ட விஷயங்களை இந்த குழுக்களில் காணலாம். ஆனால், எல்லா குழுக்கள் மீதும் ஒரு கண் வைத்திருப்பது சாத்தியம் இல்லையே. இந்த இடத்தில் தான், இண்டிபல்ஸ் வருகிறது.
ஸ்டார்ட் அப் தொடர்பான ரெட்டிட் குழுக்களில் விவாதங்களை கவனித்து, அவற்றில் இருந்து ஆக்கம் பெறக்கூடிய பதிவுகளையும், போக்குகளையும் ஏஐ துணையோடு அடையாளம் காட்டும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
சுயேட்சையாக செயல்பட விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் உதவியாக இருக்கும். இதை கட்டணச்சேவையாக இண்டிபல்ஸ் வழங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக, இண்டிபல்ஸ் உணர்த்தும் செய்தி என்னவெனில் ரெட்டிட் என்பது தகவல் சுரங்கம். துணை சேவை தேவைப்படும் அளவுக்கு ரெட்டிட் சிறந்து விளங்கும் சமூக ஊடக சேவை.
-